டீச்சரை கைது செய்யல..பத்திரிகையாளர் ஜுபைர் மீது வழக்கு! உபி முஸ்லிம் மாணவனை அடித்த விவகாரத்தில் பரபர
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம் சிறுவனை சக மாணவர்களை வைத்து தாக்க சொன்ன ஆசிரியர் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், அந்த விடியோவை வெளியிட்டதற்காக பத்திரிகையாளர் முஹம்மது ஜுபைர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்து உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள நேஹா பொதுப் பள்ளியில் இருந்து வெளியான வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டையே உலுக்கியது. அங்கு பயின்ற 7 வயது முஸ்லிம் சிறுவனை திரிப்தா தியாகி என்ற பள்ளி தலைமை ஆசிரியை நிற்க வைத்து சக மாணவ மாணவிகளை அழைத்து கன்னத்தில் அரைய சொல்லும் வீடியோதான் அது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தய அந்த வீடியோவில் அடி வாங்கி சிறுவன் வலி தாங்க முடியாமல் அழும் காட்சிகளும் பலரை கலங்க வைத்தது. அந்த ஆசிரியை மாணவன் தாக்கப்படும்போது மத ரீதியாக இஸ்லாமியர்களை விமர்சிப்பதும் பதிவாகி இருந்தது. பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, "அப்பாவி குழந்தைகள் மத்தியில் மத பாகுபாடு என்னும் விஷத்தை தூவியதன் விளைவாக இன்று பள்ளிக்கூடம் போன்ற புனித இடம் வெறுப்பின் சந்தையாக மாறி இருக்கிறது. ஒரு ஆசிரியர் இதை விட நாட்டிற்கு மோசமாக எதையும் செய்ய முடியாது." என்று ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
இது தொடர்பாக ஆசிரியை திரிப்தா தியாகி மீது முசாபர்நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், சிறுவனின் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
ஆனால், மாணவர்களின் முகத்தை மறைக்காமல் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. விவசாயிகள் சங்கத்தினர் தாக்கிய மாணவனையும், தாக்கப்பட்ட மாணவனையும் அழைத்து கட்டியணைக்க சொல்லி ஒற்றுமையை ஏற்படுத்திய வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது.
மாணவனின் பெற்றோர் இனி அந்த பள்ளிக்கு தங்கள் மகனை அனுப்ப மாட்டோம் என்று கூறியுள்ளார். அதே நேரம் அந்த பள்ளியும் திறக்கப்படாமல் மூடிய நிலையிலேயே உள்ளது. இத்தனைக்கும் காரணமாக ஆசிரியையோ கைது செய்யப்படாமல், தன்னுடைய செயலை நியாயப்படுத்தி பேசி வருகிறார்.
அந்த மாணவர் வீட்டுப் பாடம் செய்யவில்லை என்றும், தான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் மற்ற மாணவர்களை வைத்து தாக்க சொன்னேன் என்று கூறி அவர், தன் மீது விமர்சனங்களை முன்வைத்த அரசியல் வாதிகளையும் சாடினார். இந்த நிலையில் அவரை கைது செய்யாத முசாபர்நகர் போலீஸ், இந்த பரபரப்பான வீடியோவை வெளியிட்டதற்காக பிரபல பத்திரிகையாளர் முஹம்மது ஜுபைர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளது.
பிரபல உண்மை கண்டறியும் செய்தி இணையதளமான ஆல்ட் நியூஸ் இணை நிறுவனரான ஜுபைர் தொடர்ந்து சிறுபான்மையினர், பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றச் செயல்களை வெளியிட்டு வருவதுடன், அவர்களுக்கு எதிராக பரப்பப்படும் வதந்திகள், வெறுப்பு பிரச்சாரங்களுக்கு எதிராக பதிவிட்டு வருபவர். இந்த நிலையில் சிறுவனின் அடையாளத்தை வெளிப்படுத்தியதாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications