ஓவர் பில்டப்.. சந்திரயான்-3 என்றால் என்னனு கூட தெரியலையே! ட்ரோலாகும் காங்கிரஸ் அமைச்சர், எம்எல்ஏ
லக்னோ: விண்வெளியில் இந்தியாவில் வெற்றியை உலகமே கொண்டாடி வரும் நிலையில் சந்திரயான் 3 திட்டம் பற்றி என்னவென்றே தெரியாமல் மீடியாவில் ஓவர் பில்டப் கொடுத்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அமைச்சரும், உத்தர பிரதேச எம்எல்ஏ ஒருவரும் பேட்டியளித்த சம்பவத்தை வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்தியா நிலவை ஆய்வு செய்யும் வகையில் சந்திரயான் விண்வெளி திட்டத்தை உருவாக்கி உள்ளது. சந்திரயான் 1, சந்திரயான் 2 திட்டத்தை தொடர்ந்து சந்திரயான் 3 திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. அதாவது இந்தியா நிலவின் தென்துருவத்தை ஆராய பிஎஸ்எல்வி எல்விஎம் 3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 14ம் தேதி சந்திரயான் 3யை விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட் என்பது உந்துவிசை கலன், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை சுமந்து சென்றது. உந்துவிசை கலன் பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அதன்பிறகு நிலவின் சுற்று வட்டபாதையில் உந்துவிசை கலனில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்தது.
இதையடுத்து சந்திரயான் 2 திட்ட ஆர்ப்பிட்டருடன் விக்ரம் லேண்டர் தொடர்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று மாலையில் 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கியது. இதன்மூலம் நிலவில் தரையிறங்கிய 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளதோடு, நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது.
இந்நிலையில் தான் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வாகனம் வெளியேறி ஆய்வை தொடங்கி உள்ளது. இந்தியாவின் இந்த வெற்றிக்கு உலகின் பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தியாவிலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தான் சந்திரயான் 3 வெற்றி பற்றி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அசோக் சந்த்னா வாழ்த்து தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் வாழ்த்து கூறியது தான் தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. அதாவது அசோக் சந்த்னா கூறுகையில், ‛‛நாம் நிலவில் பத்திரமாக தரையிறங்கி விட்டோம். இதன்மூலம் நிலவுக்கு சென்ற பயணிகளுக்கு நான் சல்யூட் செய்கிறேன்'' என்றார்.
அதேபோல் உத்தர பிரதேச மாநிலத்தை எஸ்பிஎஸ்பி தலைவரும் எம்எல்ஏவுமான ராஜ்பார் இதுபற்றி கூறுகையில், ‛‛இந்திய விண்வெளி விஞ்ஞானிகளின் கடின உழைப்புக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். சந்திரயான் 3 வெற்றி பெற்றதற்கு நான் வாழ்த்து கூறி கொள்கிறேன். மேலும் விண்வெளிக்கு சென்றவர்கள் பூமி திரும்பும்போது நாட்டு மக்கள் அனைவரும் திரண்டு அவர்களை வரவேற்க வேண்டும்'' என தெரிவித்தார்.
இவர்கள் 2 பேர் கூறியது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. ஏனென்றால் தற்போதைய சந்திரயான்-3 திட்டம் என்பது நிலவுக்கு விஞ்ஞானிகள், சாதாரண மனிதர்கள் என யாரையும் அழைத்து செல்லவில்லை. இத்தகைய சூழலில் இருவரும் சந்திரயான் 3 திட்டம் குறித்த பின்னணி தெரியாமல் பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுத்து சிக்கியுள்ளனர்.
அதோடு 2 பேரும் அளித்த பேட்டி தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் நெட்டிசன்கள் 2 பேரையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications