அனைத்தும் சடத்தின்படிதான் நடக்கிறது.. உ.பி சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் விளக்கம்
உத்தரப் பிரதேசத்தில் புல்டோசர் குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விளக்கம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக 'புல்டோசர்' பயன்படுத்தப்படுவது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இது தொடர்பாக தற்போது விளக்கமளித்துள்ளார்.
வடமாநிலங்களில் சமீப நாட்களாக 'புல்டோசர்' செயல்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த ராமநவமியன்று டெல்லி ஜஹாங்கிர்புரியில் இந்து அமைப்புகளின் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் சர்ச்சைக்குரிய முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக கூறி இஸ்லாமிய அமைப்பினரும் எதிர் முழக்கமிட்டுள்ளனர். இதனையடுத்து இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது.

இவ்வாறு இருக்கையில் மோதலில் ஈடுபட்டதாக கூறி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்று அப்போதைய டெல்லி பாஜக மாநகராட்சி நிர்வாகிகள் புல்டோசர் மூலம் சில வீடுகளை இடித்து தரைமட்டமாக்கினர். அதேபோல குற்ற வழக்குகளில் சிக்கும் பலரின் வீடுகளும் பாஜக ஆட்சியாளர்களின் உத்தரவின் பேரில் இடிக்கப்படுகிறது. இந்த செயல்பாடுகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
டெல்லி மட்டுமல்லாது தற்போது உத்தரப் பிரதேசத்திலும், புல்டோசர் அரசியல் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஒருவரின் உதவியாளர், கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்தார். எனவே இவரது வீடு சட்டவிரோதமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறி கடந்த மாதம் 24ம் தேதி புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது. இதற்கு சமாஜ்வாதி கட்சியிலிருந்து கடும் எதிர்ப்பு மேலெழுந்தது. "முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆட்சி செய்ய வேண்டும். புல்டோசர் மூலம் ஆட்சி செய்வது சரியல்ல" என்று எதிர்க்கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் விமர்சித்திருந்தார்.

மற்ற தலைவர்களும் இதே போன்று விமர்சனத்தை முன்வைத்திருந்தனர். இந்நிலையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இதற்கு விளக்கமளித்துள்ளார். அதில், "நான் ஒரு யோகி. என்னுடைய வாழ்க்கையையும் இப்படியேதான் நான் நடத்த விரும்புகிறேன். ஆனால் மக்களின் நலனுக்காக நான் எவ்வித சமரசத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். மக்கள் நலனை காக்க நான் மேற்கொள்ளும் முயற்சிகளில் எனக்கு எந்த அவப்பெயர் வந்தாலும் கவலை கிடையாது. பலர் என்னை புல்டோசர் பாபா என்று கூறுகிறார்கள். இது குறித்தெல்லாம் எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை.
என்னுடைய நடவடிக்கையால் மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் எனக்கு அது போதும். ஒவ்வொரு நற்செயலும் பாராட்டப்படுவதுடன் விமர்சிக்கவும்படுகிறது. எனவே எனக்கு விமர்சனங்கள் குறித்து அக்கறை இல்லை. குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அது சட்டத்திற்கு உட்பட்டுதான் எடுக்கப்படுகிறது. குற்றம் புரிந்தவர்களுக்கு உரிய அவகாசம் வழங்கப்படுகிறது. அதன் பின்னரும் அவர்கள் தங்கள் தவறுகளை மாற்றிக்கொள்ள எவ்வித முயற்சியும் எடுக்கவில்லையென்றால்தான் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன" என்று விளக்கமளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications