உபி வன்முறை: பிரியங்கா பின் அணிதிரளும் காங்.. 2023 சட்டசபை தேர்தல் குறி? மனம் திறக்கும் ப சிதம்பரம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளதை மிகக் கடுமையாக விமர்சித்துள்ள ப சிதம்பரம் இதை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும் உபி அரசு சட்டத்தை அப்பட்டமாக மீறியுள்ளது என்றும் ப சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
Recommended Video
உத்தரப் பிரதேச மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் அம்மாநில அமைச்சரின் கார் புகுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து முன்னாள் உள் துறை அமைச்சர் ப சிதம்பரம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கைது சரியா
கேள்வி- அமைதியைச் சீர்குலைக்க முயன்றதாகப் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டாரா?
பதில்- அவர்கள் சட்ட விரோதத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) பிரிவு 151இன் கீழ் ஒரு நபரைக் கைது செய்தால், அந்த நபரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைத்திருக்க முடியாது. ஆனால் அவர்கள் பிரியங்கா காந்தியைக் கிட்டத்தட்ட 36 மணி நேரம் காவலில் வைத்துள்ளனர். இது சட்டவிரோதமானது. மேலும், வன்முறையைத் தூண்டியதாக (ஐபிசி) சட்டம் 107 மற்றும் பிரிவு 116களில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். யாரை அவர் தூண்டினார். காற்றையும் வெற்றிடத்தையும் தூண்ட முடியாது. அவர் எதைத் தூண்டினார் என்பதை விளக்கிச் சொல்ல வேண்டும். அவர் எந்த குற்றத்திற்குத் துணை நின்றார்? எதையும் குறிப்பிடப்படவில்லை. வெறுமனே தூண்டிவிட்டார் என்று குற்றஞ்சாட்டுகிறீர்கள்.
இது முழுக்க முழுக்க சட்டவிரோதமான ஒன்று. அவர்கள் பிரியங்காவை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தவில்லை. மாஜிஸ்திரேட் பிரியங்காவை பார்க்காமேலேய ரிமாண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளார். பிரிவு 167 இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டால், ஒரு நபர் 24 மணிநேரத்திற்கு மேல் காவலில் வைக்கக் கூடாது. காவலில் வைக்க வேண்டும் என்றால் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் கைது செய்யப்பட்ட நபரைப் பார்க்காமல், மாஜிஸ்திரேட் எப்படி ரிமாண்ட் உத்தரவு பிறப்பிக்கிறார்? ஆலிஸ் இன் வொண்டர்லேண்டை விட உத்தரப் பிரதேசம் மோசமானது!

சட்ட ஒழுங்கு பாதிப்பு
கேள்வி - பிரியங்கா காந்தி, தீபேந்தர் ஹூடா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தடையைத் தாண்டி லக்கிம்பூர் கெரிக்கு செல்ல முயன்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாதா? இதனால் தான் கைது செய்யப்பட்டனர்.
பதில் - நான் அந்த சாலனை படித்தேன்; சிஆர்பிசியின் பிரிவு 151 உள்ளது, அதாவது குற்றம் செய்யத் திட்டமிட்டார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது அவர் கைது செய்யப்பட்ட போது எந்த குற்றமும் செய்யவில்லை. எனவே இந்த பிரிவு பொருந்தாதது. அதேபோல மற்ற இரண்டு பிரிவுகள் ஐபிசியின் 107 மற்றும் 116. அதாவது குற்றம் செய்யத் தூண்டினார்கள் என்று. எதைத் தூண்டினார்கள் என்று தெளிவாகச் சொல்ல வேண்டும்.

11 பேர் மீது எஃப்ஐஆர்
கேள்வி - அமைதியைச் சீர்குலைத்ததற்காகப் பிரியங்கா காந்தி உட்பட 11 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக SHO ஹர்கான் காவல் நிலையம் தெரிவித்துள்ளதே?
பதில் - பிரிவு 151இன்படி ஒரு நபர் குற்றம் செய்யத் திட்டமிட்டிருந்தால் காவல்துறை அவரை தடுப்பு காவலில் வைக்கலாம். அதாவது எந்தவொரு குற்றத்தையும் செய்யாமலேயே திங்கள்கிழமை பிரியங்காவை போலீசார் கைது செய்துள்ளனர்.
மீண்டும் சொல்கிறேன் பிரிவு 151இன் கீழ் கைது செய்யப்பட்ட எந்தவொரு நபரையும் 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்கக் கூடாது. அதன்படி நேற்றே அவரை விடுவித்திருக்க வேண்டும். 24 மணி நேரத்தைத் தாண்டி அவரை எப்படிக் காவலில் வைத்திருக்க முடியும்? அதன்பிறகு எந்த காவலும் சட்ட விரோதமானது.

சட்டசபைத் தேர்தல்
கேள்வி - இது சட்ட விரோதமானது மட்டுமல்ல. அரசியலும் இதில் தொடர்புள்ளது. உபி சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ளன. லக்கிம்பூரில் நிலைமை ஒரு அரசியல் போர்க்களத்தை உருவாக்கலாமே?
பதில் - பிரியங்கா காந்தி இப்போது லக்கிம்பூர் கேரிக்கு அருகில் இல்லை. அவள் சீதாபூரில் தடுப்பு காவலில் உள்ளார். 3 பிரிவுகளின் கீழ் அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதுவும் முற்றிலும் சட்ட விரோதமான பிரிவுகள். இந்த நடவடிக்கைக்கு ஒரு காரணம் அரசியல் தான். இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை. அவர்கள் தங்களிடம் இருக்கும் அரசியல் அதிகாரத்தை வெளிப்படுத்துகிறார்கள், "நான் முதல்வர். எனவே விரும்பியதை என்னால் செய்ய முடியும்" என்ற மனநிலையில் யோகி ஆதித்யநாத் இதைச் செய்கிறார். அவர் முதல்வராக இருப்பதால், அவர் சட்டத்தை மீறலாமா! யோகி ஆதித்யநாத்தும் சரி, உபி போலீசாரும் சரி தொடர்ந்து சட்டத்தை மீறி வருகின்றனர்.

என்ன வித்தியாசம்
கேள்வி - இதுபோன்ற சம்பவங்கள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளன. சட்டம் ஒழுங்குக்கு இடையூறு விளைவிப்பதாகக் கூறி அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். பின்னர் விடுதலை செய்யப்படுவார்கள். இது எப்போதும் நடப்பது தான். இதில் என்ன வித்தியாசம்?
பதில் - பிரியங்கா காந்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படவில்லை. அவர் பிஏசி விருந்தினர் மாளிகையில் அடைக்கப்பட்டார். 24 மணி நேரத்தைக் கடந்துவிட்டது. இப்போது அவரை தடுப்புக்காவலில் வைத்திருப்பது சட்ட விரோதமானது. அடுத்த கட்டமாக, அவர் 24 மணி நேரத்திற்குள் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படவில்லை. இப்போது வரை அவர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படவில்லை, இது பிரிவு 167 ஐ மீறுகிறது. அவர் குற்றம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. குற்றம் செய்யத் தூண்டியதாகவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. என்ன குற்றம்? யாரைத் தூண்டினார். இப்படி எதையும் குறிப்பிடாமல் வழக்குப்பதிவு செய்வதே முற்றிலும் சட்ட விரோதம்.

பிரியங்கா காந்தி
கேள்வி - சத்தீஸ்கர் முதல்வர் விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா காந்தியுடன் லக்கிம்பூர் கேரி செல்வோம் என்கின்றனர். பிரியங்கா காந்திக்கு பின்னால் காங்கிரஸ் ஒன்றுபடும் அரசியல் நிகழ்வா இது?
பதில் - நிச்சயமாக. மக்கள் பிரச்சினைகள் இங்குச் சம்பந்தப்பட்டிருப்பதால் நாங்கள் ஒன்றுபடுகிறோம். விவசாயிகளின் பிரச்சினைகள் உள்ளன. நான்கு பேர் ஒரு SUV மோதி கொல்லப்பட்டுள்ளனர். போலீஸ் துப்பாக்கிச் சூடும் நடந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவை மக்களின் பிரச்சினைகள் தானே. மேலும் அரசியல் தலைவர்கள் மக்கள் பிரச்சினைகளை எடுத்துக் கொள்ளும்போது, இது தான் சரியான வழி என்று ஒன்றைக் கூற முடியாது.
அரசியல் தலைவர்களை லக்னோ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்த முடியாது. லக்னோ விமான நிலையம் ஒரு சுதந்திரமான இடம் என்றே நான் கருதுகிறேன். அது இன்னும் இந்தியாவின் ஒரு பகுதி தான். முதல்வர் ஒருவர் லக்னோவுக்கு வந்தால், அவர் விரும்பும் எந்த இடத்திற்கும் செல்லலாம். 144 தடை உத்தரவு உள்ள இடத்தைத் தவிர எங்கு வேண்டுமானாலும் செல்லாம். அப்போதும் கூட, 144 தடை உத்தரவு உள்ள இடத்திற்கு அவர் தனியாகச் செல்ல முடியும். இரண்டு, மூன்று நபர்களுடன் அவர் செல்லலாம். ஐந்து பேருக்கு மேல் கூடும்போது தான் அது "சட்டவிரோத கூட்டம்" ஆகிறது. எந்தவொரு தனிநபரும் இன்றும் கூட லக்கிம்பூர் கேரிக்குச் செல்லலாம். 144 தடை சட்டம் ஒரு பெரிய குற்றம் போல் கட்டமைக்கப்படுகிறது. இது சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் சட்டம் மட்டுமே.

உபி காங்கிரஸ்
கேள்வி - 30 ஆண்டுகளாகவே உ.பி.யில் காங்கிரஸ் ஒரு முக்கிய சக்தியாக இல்லை. 2022 தேர்தலைக் கருத்தில் கொண்டு அந்த நிலையை மாற்ற எடுக்கப்படும் ஒரு புதிய முயற்சியா இது?
பதில் - மற்ற மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்த போதும் போராட்டம் நடத்தினோம். ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கும் உ.பி.க்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அங்குத் தவறு நடந்த போதும் போராடினோம். நாட்டில் எங்காவது தவறு நடந்தால், அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அங்குச் சென்று போராட்டம் நடத்த உரிமை உண்டு.

ராஜஸ்தான் விவகாரம்
கேள்வி - காங்கிரஸ் குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு மட்டுமே குரல் கொடுப்பதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. ராஜஸ்தானில் விவசாயிகள் போலீசாரால் தாக்கப்பட்டனர். அதற்குக் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்ததா?
பதில் - வேறு ஏதாவது கட்சி ராஜஸ்தானில் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆளும் கட்சி. அது அரசு நடவடிக்கை அல்லது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையின் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் கருதினால் அதை எதிர்க்கவும் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு.












Click it and Unblock the Notifications