ஷாக்.. அரசு மருத்துவமனையில் இளைஞரின் ரத்தத்தை சுவைத்த நாய்..உத்தர பிரதேசத்தில் நடந்த அவலம்.. வீடியோ
லக்னோ: உத்தர பிரதேசத்தில் சாலை விபத்தில் சிக்கிய இளைஞர் அரசு மருத்துவமனையில் தரையில் மயங்கி கிடந்த நிலையில் உள்ளே நுழைந்த நாய் அவரது ரத்தத்தை மோப்பம் பிடித்து சுவைத்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் உள்ள சில அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதாகவும், டாக்டர்கள், ஊழியர்கள் கவனக்குறைவாக இருப்பதாகவும் அவ்வப்போது புகார் எழுந்து வருகிறது.
இந்நிலையில் தான் உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் கீழே மயங்கி கிடக்க மருத்துவமனைக்குள் நுழைந்த நாய் வடிந்த ரத்தத்தை சுவை பார்த்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

விபத்தில் சிக்கிய இளைஞர்
உத்தர பிரதேச மாநிலத்தில் குஷி நகர் மாவட்டம் உள்ளது. இந்நிலையில் குஷி நகரில் உள்ள ஜாதாபஜார் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் பிட்டு (வயது 24). இவர் திடீரென்று சாலை விபத்தில் சிக்கினார். பிட்டுவின் தலையில் அடிப்பட்டது. பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்வர்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து ஆம்புலன்ஸ் வந்தது. இதையடுத்து பிட்டு மீட்கப்பட்டு குஷி நகர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வெளியான வீடியோ
இந்நிலையில் தான் இணையதளத்தில் வீடியோ ஒன்று பரவியது. அதாவது தலையில் காயமடைந்த நிலையில் ஒருவர் மருத்துவமனை தரையில் படுத்து கிடக்க, அவர் அருகே வந்த நாய் தரையில் சொட்டி இருந்த ரத்தத்தை நாக்கால் சுவைத்தது தெரியவந்தது. இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது எங்கு நடந்தது? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

அவசர சிகிச்சை பிரிவில்
இந்த விசாரணையின்போது சம்பவம் குஷி நகர் அரசு மருத்தவுமனையில் நடந்தது தெரியவந்தது. மேலும் தரையில் மயங்கி கிடந்த நபர் விபத்தில் சிக்கிய பிட்டு என்பதும், மருத்துவமனையில் யாரும் இல்லாத நிலையில் நாய் நுழைந்து அவர் அருகே தரையில் படிந்திருந்த ரத்தத்தை நாக்கால் சுவைத்ததும் தெரியவந்தது. அதோடு அவசர சிகிச்சை பிரிவில் பிட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு நாய் நுழைந்ததும் தெரியவந்தது.

விசாரணை - 4 பேர் சஸ்பெண்ட்
இதுபற்றி மருத்துவ சூப்பிரண்டு சதேந்திர குமார் வர்மா விசாரணை நடத்தினார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛விபத்தில் சிக்கிய நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு படுக்கை வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் அதில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இந்த வேளையில் அவரை போல் மேலும் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் டாக்டர், நர்ஸ்கள் அவர்களை கண்காணிக்க சென்றனர். இந்த வேளையில் நாய் நுழைந்துள்ளது. . சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 ஸ்வீப்பர், 2 வார்டு பாய்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்'' என்றார்.

தொடரும் சிகிச்சை
இந்நிலையில் சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் தேவி தயாள் வர்மா விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணையின்படி இன்னும் சிலர் மீது நடவடிக்கை பாய உள்ளது. இதற்கிடையே விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பிட்டு மேல்சிகிச்சைக்காக கோரக்பூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications