நாள் குறிச்சாச்சு.. அயோத்தி ராமர் கோயில் 2024 தேர்தலுக்கு முன்பே திறப்பு! முன்கூட்டியே செல்லும் மோடி
லக்னோ: அயோத்தியில் பாபர் மசூதி தகர்க்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் ஜனவரி 24 ஆம் தேதிக்கு முன் திறக்கப்படும் என கோயில் தலைமை பூசாரி சத்யேந்திர தாஸ் மகாராஜ் அறிவித்து உள்ளார்.
முகலாய பேரரசர் பாபரால் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி கிபி 1528 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 495 ஆண்டுகள் பழமையான இந்த மசூதி அமைந்து உள்ள நிலத்தை ராம ஜென்ம பூமி என்று கூறி இந்துத்துவா அமைப்பினர் உரிமை கோரினர். இந்த நிலையில் பாபர் மசூதி கடந்த 1992 ஆம் ஆண்டு இந்துத்துவா அமைப்பினரால் தகர்க்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து பாபர் மசூதி நில வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றம் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு இந்த வழக்கின் தீர்ப்பை அளித்தது.
அதில், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்துத்துவ அமைப்பினரின் கோரிக்கையின்படி ராமர் கோயிலை கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை தொடர்ந்து ராமர் கோயில் கட்டுமான பணி பாபர் மசூதி இருந்த இடத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்காக நாடு முழுவதும் நிதி திரட்டப்பட்ட நிலையில், பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு பிறகு கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி அந்த பூமி பூஜை நிகழ்வில் பங்கேற்றார். இந்த ராமர் கோயிலின் மாதிரி புகைப்படமும் வெளியிடப்பட்டது.
ரூ.1,800 கோடி மதிப்பில் ராமர் கோயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பெரும்பாலான பணிகள் தற்போது நிறைவு பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், 2023 ஆம் ஆண்டு இறுதியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுவிடும் என்றார்.

2024 ஆம் ஆண்டிற்குள் கோயில் கட்டுமான பணிகளை நிறைவு செய்யப்படும் என அப்போதே கோயில் நிர்வாகம் தெரிவித்தது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதிக்கு முன் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படும் என்று கோயில் தலைமை பூசாரி சத்யேந்திர தாஸ் மகாராஜ் அறிவித்து உள்ளார்.
ஜனவரி 14 ஆம் தேதி கோயிலை திறப்பதற்கான முதற்கட்ட பூஜைகள் தொடங்கும் என்று தெரிவித்து இருக்கும் அவர், பிரதமர் நரேந்திர மோடி இதற்காக ஜனவரி 22 ஆம் தேதியே அயோத்திக்கு செல்ல உள்ளதாக கூறி இருக்கிறார். 2024 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பே அயோத்தியில் ராமர் கோயிலை திறந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசு இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications