மேற்கு உ.பி.யில் பாஜகவுக்கு விழும் அடி! "ராஜபுத்திரர்கள், தியாகி" ஜாதியினர் அதிருப்தி! ஏன் தெரியுமா?
லக்னோ: இரண்டாம் கட்ட லோக்சபா தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிரான சலசலப்புகள் மேலெழுந்திருக்கிறது. குறிப்பாக ராஜபுத்திரர்கள், தியாகி உள்ளிட்ட ஜாதிகள் பாஜகவுக்கு எதிராக கொதித்தெழுந்திருக்கின்றன.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை தற்போது தீவிரமடைந்துள்ளது. 13 மாநிலங்களில் உள்ள 89 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த 13 மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முக்கியமானதாகும். இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் முதற்கட்டமாக 8 தொகுதிகளுக்கு ஏப்.19 அன்று தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து அம்ரோஹா, மீரட், பாக்பத், காசியாபாத், கௌதம் புத்த நகர், புலந்த்ஷாஹர், அலிகார், மதுரா என 8 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இவையனைத்தும் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள தொகுதியாகும்.
இந்த தொகுதிகளில் ராஜபுத்திரர்கள், தியாகி, சைனிகள் ஆகிய ஜாதியினர் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்கின்றனர். ஆனால், இந்த சமூகத்தினர் தற்போது பாஜகவுக்கு எதிராக திரும்பியுள்ளனர். கடந்த 7ம் தேதி சஹாரன்பூரில் ராஜபுத்திரர்கள் நடத்திய மகாபஞ்சாயத்து பாஜகவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேற்கு உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில் இந்த சமூகத்தினரின் எண்ணிக்கை 10 சதவிகிதமாக இருக்கிறது. இருப்பினும் தேர்தலில் இவர்களுக்கான பிரதிநிதித்துவம் போதிய அளவில் இல்லை என கொதிப்பில் இருக்கிறார்கள். காஜியாபாத் தொகுதியில் கடந்த முறை ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் வி.கே.சிங் களமிறக்கப்பட்டிருந்தார். இவர் ராஜபுத்திர சமூகத்தை சேர்ந்தவராவார். ஆனால் இந்த முறை இவருக்கு பதில் குமார் கர்க்கை பாஜக நிறுத்தியுள்ளது.
அதேபோல தியாகி, சைனி உள்ளிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றும் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் பாஜகவுக்கு எதிராக புயலை கிளப்பியுள்ளனர். இது குறித்து ராஜபுத்திர தலைவர் தாக்கூர் பூரன் சிங் கூறுகையில்,
"ராஜபுத்திரரின் வரலாறு திரிக்கப்பட்டிருக்கிறது. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவில் எங்களுக்கான சம உரிமை மறுக்கப்படுகிறது. லோக்சபாவில் எங்களுக்கான பிரதிநிதித்துவம் மறுக்கப்படுகிறது. எங்கள் சமூகத்தை விளிம்பில் தள்ள பாஜக முயற்சிக்கிறது. இதற்கெல்லாம் நாங்கள் பாஜகவுக்கு உரிய பாடத்தை கற்பிப்போம்" என்று கூறியுள்ளார்.
நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கும் மீரட் தொகுதியை எடுத்துக்கொண்டால் இங்கு, இஸ்லாமியர்கள் 32 சதவீதம், ஜாதவ் 15 சதவீதம், பிராமணர், பனியா, பஞ்சாபி 13 சதவீதம், ஜாட் 7 சதவீதம், குஜ்ஜார்: 4 சதவீதம், ராஜபுத்திரர்கள் 6 சதவீதம், தியாகி 6 சதவீதம், வால்மீகி மற்றும் ஜாதவ் அல்லாத எஸ்சி 5 சதவீதம், சைனி 3 சதவீதம், அஹிர் 1% சதவீதம், காஷ்யப் பிரஜாபதி உள்ளடக்கிய அனைத்து OBC பிரிவினர் 8 சதவீதம் என இருக்கின்றனர்.
இந்த தொகுதியில் பாஜக ராமாயணம் டிவி தொடர் புகழ் அருண் கோவிலை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இவர் பஞ்சாபி சமூகத்தை சேர்ந்தவராவார். இந்த தொகுதியில் பஞ்சாபி சமூகத்தை சேர்ந்தவரின் வாக்கு சதவீதம் 13 தான். சமாஜ்வாதி கட்சி ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த சுனிதா வர்மாவையும், பகுஜன் சமாஜ் கட்சி தியாகி சமூகத்தைச் சேர்ந்த தேவ்ரத் தியாகியையும் வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
இந்த தொகுதியில் பாஜக மீதான அதிருப்தியை வெளிப்படுத்திய இஸ்லாமிய-தலித்-ராஜபுத்திர-தியாகி சமூகங்களின் கூட்டு வாக்குகளை பெற பகுஜன் சமாஜ் கட்சி தீவிரமாக முயன்று வருகிறது. ஓபிசி மற்றும் பாஜகவை எதிர்க்கும் பிற ஜாதியினருடன் சேர்த்து இஸ்லாமிய வாக்காளர்களை கவர சமாஜ்வாடி கட்சி திட்டமிட்டு வருகிறது.
அதேபோல அம்ரோஹா தொகுதியை பொறுத்த அளவில்,
இஸ்லாமியர்கள்: 42 சதவீதம்
ஜாதவ்: 13 சதவீதம்
ராஜபுத்திர: 8 சதவீதம்
ஜாட்: 7 சதவீதம்
காகி: 7 சதவீதம்
சைனி: 5 சதவீதம்
குஜ்ஜார்: 4 சதவீதம்
மற்றவர்கள்: 4 சதவீதம்
வால்மீகி மற்றும் ஜாதவ் அல்லாத எஸ்சி பிரிவினர்: 4 சதவீதம்
யாதவ்: 2 சதவீதம்
பிராமணர்கள்+ பனியா: தோராயமாக 2 சதவீதம்
அஹிர்: 2 சதவீதம்
ஓபிசி: 2 சதவீதம்
என மக்கள் இருக்கிறார்கள். இந்த தொகுதியில் இஸ்லாமியர்களின் வாக்கு அதிகமாக இருக்கிறது என்பதால், காங்கிரசும், பகுஜன் சமாஜ் கட்சியும் இஸ்லாமிய வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். காங்கிரஸ் சார்பில் டேனிஷ் அலியும், பிஎஸ்பி சார்பில் முஜாஹித் ஹுசைனும் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். கடந்த முறை டேனிஷ் அலியிடம் தோற்ற குஜ்ஜார் சமூகத்தைச் சேர்ந்த கன்வர் சிங் தன்வாருக்கு பாஜக மீண்டு சீட் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications