வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்! முன்மொழிந்த 4 பேர் யார் தெரியுமா
லக்னோ: 3ஆவது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய உள்ளார். வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பு பிரதமர் மோடி, கங்கை ஆற்றங்கரையில் சிறப்பு வழிபாடு நடத்தினார். அதைத் தொடர்ந்து அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
நமது நாட்டில் மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதில் 4 கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், இன்னும் 3 கட்ட தேர்தல் நடக்க உள்ளது.

இதற்காகப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே பிரதமர் மோடி இன்று தான் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய உள்ளார்.
மோடி: முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று திங்கள்கிழமை வாரணாசியில் 6 கிமீ தூரத்திற்கு ரோட் ஷோ ஒன்றை நடத்தினார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஒரு நாள் முன்பு வாரணாசியில் தனது செல்வாக்கு எந்தளவுக்கு இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் அவர் இந்த ரோட் ஷோவை நடத்தினார். நேற்று நடந்த ரோட் ஷோவில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது மோடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் லங்கா கேட்டில் உள்ள கல்வியாளரும் சமூக சீர்திருத்தவாதியுமான மதன் மோகன் மாளவியாவின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். வாரணாசியைக் காங்கிரஸ் புறக்கணிப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், 10 ஆண்டுகளில் தான் வாரணாசியை மாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.
கங்கை தாய்: இந்த ரோட் ஷோ தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "எனது உடலில் ஓடும் ஒவ்வொரு துளி ரத்தமும் காசியை வணங்குகிறது. ரோட்ஷோவில் நீங்கள் தந்த பாசமும் ஆசீர்வாதங்களும் கற்பனை செய்ய முடியாதவை. நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறேன். உங்கள் பாசத்தில் 10 ஆண்டுகள் என்பது மிக வேகமாக ஓடிவிட்டது. முதலில் இங்கு வந்த போது கங்கை தாய் என்னை அழைத்ததாகச் சொல்லியிருந்தேன். இன்று சொல்கிறேன்.. கங்கை தாய் என்னை தத்தெடுத்துக் கொண்டாள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
வேட்புமனு தாக்கல்: இதற்கிடையே இன்று பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். இதற்காக அவர் அங்கு சுமார் 5 கிமீ தொலைவிற்கு மீண்டும் ரோட் ஷோ செல்கிறார். அதில் பல மாநில முதல்வர்கள், பாஜக தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொள்கிறார்கள். முன்னதாக ரோட் ஷோவுக்கு முன்பு பிரதமர் மோடி, கங்கை ஆற்றங்கரையில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
இந்த ரோட் ஷோ மிகவும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரணாசியைத் தாண்டி உபி மற்றும் வட இந்தியா முழுக்க தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இதில் பல மாநில தலைவர்களையும் பாஜக அழைத்துள்ளது.

தொடர்ந்து பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் உபி முதல்வர் யோகி ஆதித்தயநாத் அவருடன் இருந்தார். பொதுவாக வேட்புமனுவில் அந்த தொகுதியைச் சேர்ந்த 4 வேட்பாளர்கள் முன்மொழிய வேண்டும். அதன்படி பிரதமர் மோடியின் வேட்புமனுவை பண்டிட் ஞானேஸ்வர், பைஜ்நாத் படேல், லால் சந்த் குஷ்வாகா, சஞ்சய் சோங்கர் ஆகியோர் முன்மொழிந்துள்ளனர்.
வாரணாசி தொகுதி: வாரணாசி தொகுதி என்பது பாஜக மற்றும் பிரதமர் மோடியின் கோட்டையாகும். அவர் ஏற்கனவே 2014 மற்றும் 2019 என இரண்டு முறை இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.. இந்த வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் போட்டியிடுகிறார். வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக அஜய் ராய் களமிறங்குவது இது மூன்றாவது முறையாகும். வாரணாசி தொகுதியில் ஜூன் 1ஆம் தேதி ஏழாம் கட்டத்தின் போது நடைபெறுகிறது.
கடந்த 2019இல் வாரணாசியில் நடந்த மக்களவைத் தேர்தலில், பிரதமர் மோடி 6.74 லட்சம் வாக்குகளைப் பெற்றார். இது ஒட்டுமொத்தமாகப் பதிவான வாக்குகளில் 63.6 சதவீதமாகும்.. 2014ல், பிரதமர் மோடி குஜராத்தின் வதோதரா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி ஆகிய இரு லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டிலும் மோடி வென்ற நிலையில், வதோதரா எம்பி பதவியை அவர் ராஜினாமா செய்தார்.












Click it and Unblock the Notifications