ஜஸ்ட் ரூ.100 தான்.. 32 ஆண்டுக்கு முந்தைய லஞ்ச வழக்கில் வசமாக சிக்கிய முதியவர்.. தண்டனையை பாருங்க!
இந்த தீர்ப்பை கேட்டு நாராயன் வர்மா கதறி அழுதார். வயதாகிவிட்டதால் ஏராளமான வியாதிகளுடன் தான் வாழ்ந்து வருவதாகவும், இந்த வயதில் சிறைக்கு சென்றால் தான் உயிரிழக்க நேரிடும் என்றும் கூறி அவர் கதறி அழுதார்.
லக்னோ: 32 ஆண்டுகளுக்கு முன்பு 100 ரூபாயை லஞ்சம் வாங்கிய ரயில்வே ஊழியருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
வயது மூப்பை காரணம் காட்டி தனது தண்டனையை சிறிது குறைக்குமாறு குற்றவாளி கேட்டுக்கொண்ட போதிலும், தண்டனையை குறைக்க நீதிபதி மறுத்துவிட்டார்.
அரசு துறையில் அமர்ந்து கொண்டு, அரசாங்க சம்பளத்தையும் பெற்றுக்கொண்டு அப்பாவி மக்களிடம் லஞ்சம் வாங்கும் ஊழிியர்களுக்கு இந்த சம்பவம் சிறந்த பாடமாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓய்வூதியம் கொடுக்க லஞ்சம்
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் நாராயன் வர்மா (82). உத்தரபிரதேச ரயில்வேயில் கிளார்க்காக இவர் பணிபுரிந்து வந்திருக்கிறார். அந்த சமயத்தில், ஓய்வுபெற்ற ரயில் ஓட்டுநரான ராம்குமார் திவாரி என்பவர் கடந்த 1991-ம் ஆண்டு தனது ஓய்வூதியத்தை வாங்குவதற்காக நாராயன் வர்மாவை அணுகியுள்ளார். அதற்கு நாராயன் வர்மா, ரூ.100 லஞ்சமாக கொடுத்தால்தான் ஓய்வூதியம் தர முடியும் எனக் கூறியிருக்கிறார்.

கையும் களவுமாக சிக்கினார்
இதையடுத்து, ராம்குமார் திவாரி இதுதொடர்பாக சிபிஐயில் புகார் அளித்தார். பின்னர் சிபிஐ அதிகாரிகள் கூறியதன்பேரில், நாராயன் வர்மா கேட்டபடி அவருக்கு ரூ.100-ஐ லஞ்சமாக கொடுத்தார் ராம்குமார் திவாரி. அப்போது அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் நாராயன் வர்மாவை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக 2 நாட்கள் சிறையில் இருந்த அவர், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் ஏராளமான வழக்குகள் காரணமாக, இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது.

32 ஆண்டுகளுக்கு பிறகு
காலம் உருண்டோடியது. நாராயன் வர்மாவும் ரயில்வேயில் இருந்து ஓய்வு பெற்று 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில், கிடப்பில் இருந்த வழக்குகளை லக்னோ சிபிஐ நீதிமன்றம் மீண்டும் தூசு தட்டியது. இதில், நாராயன் வர்மா 100 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கு கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நாராயன் வர்மா லஞ்சம் வாங்கியிருப்பது உறுதியாகியுள்ளதால் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

கதறி அழுத முதியவர்
இந்த தீர்ப்பை கேட்டு நாராயன் வர்மா கதறி அழுதார். வயதாகிவிட்டதால் ஏராளமான வியாதிகளுடன் தான் வாழ்ந்து வருவதாகவும், இந்த வயதில் சிறைக்கு சென்றால் தான் உயிரிழக்க நேரிடும் என்றும் கூறி அவர் கதறி அழுதார். மேலும், தனது வயது மூப்பை கருத்தில்கொண்டு தனது சிறைத்தண்டனையை குறைக்குமாறும் அவர் நீதிபதியிடம் மன்றாடினார். ஆனால், நீதிபதியோ, வயது மூப்பை காரணமாக கூறி உங்களுக்கு தண்டனையை குறைத்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும் எனக் கூறி அவருக்கு தண்டனையை குறைக்க மறுத்துவிட்டார். 32 ஆண்டுகளுக்கு முன்பு தனது கடமையை செய்ய லஞ்சம் வாங்கிய அதிகாரி, தற்போது தள்ளாத வயதில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications