நீட் தேர்வு முறைகேட்டில் முக்கிய குற்றவாளி கைது.. வினாத்தாளை லீக் செய்த கும்பலின் தலைவன் ரவி அட்ரி!
லக்னோ: நீட் தேர்வு வினாத்தாளை விற்பனை செய்த மோசடி கும்பலின் தலைவன் ரவி அட்ரி உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ரவி அட்ரி, தேர்வு முறைகேடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தது அம்பலமாகியுள்ளது.
நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. நீட் தேர்வில் பல்வேறு முறைகேடு புகார்கள் ஒவ்வொரு நாளும் வெளியாகி வருகின்றன. இதனால் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்கிற போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.

பீகாரில் நீட் தேர்வின் வினாத்தாள் லீக் ஆன விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கிறது. பாட்னாவில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் தேர்வு எழுதிய 12 மாணவர்களுக்கு, முன்கூட்டியே வினாத்தாள் கசிந்து இருக்கிறது. இதற்காக பெரும் தொகை கைமாறி உள்ளதும் அம்பலமாகியுள்ளது.
பீகாரில் நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் ரூ. 30 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் 4 பேர் உட்பட மொத்தம் 15 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீட் வினாத்தாள் விற்பனை விவகாரத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 பேரை பீகார் பொருளாதார குற்றத் தடுப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் பாட்னாவுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக உத்தர பிரதேசத்தில் இருந்து பீகாருக்கு வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், உ.பி காவலர் தேர்வில் வினாத்தாளை கசியவிட்ட ரவி அட்ரி கும்பலுக்கு நீட் வினாத்தாள் கசிவிலும் தொடர்பு இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பீகார் போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில் உ.பி சிறப்பு அதிரடிப்படை போலீசார், ரவி அட்ரியை இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் இருந்து நீட் வினாத்தாளை கசியவிட்டதும், ஜார்க்கண்ட் வழியாக பீகாருக்கு அனுப்பி வைத்ததும் ரவி அட்ரியின் வேலைதான் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்பு உத்தர பிரதேச மாநில காவலர் தேர்வு வினாத்தாளை கசிய விட்ட வழக்கில் கைதானவர் ரவி அட்ரி. ரவி அட்ரி தேர்வு முறைகேடுகளிலும், ஆள் மாற்றாட்டத்திலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications