சர்ச்சையான தொழுகை.. பாய்ந்த வழக்கு.. மத பிரார்த்தனைகளுக்கு தடை விதித்த உத்தர பிரதேச லுலு மால்!
லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் புதிதாக துவங்கப்பட்டுள்ள லுலு மாலில் தொழுகை நடத்தியது சர்ச்சையானது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் மாலில் மதம்சார்ந்த பிரார்த்தனைகளுக்கு அனுமதியில்லை என அந்த மால் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் லுலு மால் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இந்த லுலு மாலை ஜூலை 10ல் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தார்.
மொத்தம் 300 சில்லரை விற்பனை கடைகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த மாலுக்கு தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.

தொழுகையால் சர்ச்சை
இந்நிலையில் தான் ஜூலை 12ல் லுலுமாலில் சிலர் தொழுகை நடத்தியாக கூறி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவ துவங்கியது. இதற்கு அகில பாரத் இந்து மகாசபா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த மாலுக்கு இந்துக்கள் செல்லாமல் புறக்கணிக்க வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியது. அதோடு, அமைப்பின் தேசிய செய்தி தொடர்பாளர் சிசிர் சதுர்வேதி கூறுகையில், ‛‛மாநிலத்தில் பொதுஇடத்தில் தொழுகை நடத்தப்பட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இது விதிமீறலாகும். இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும்'' என கூறினார்.

மத பிரார்த்தனைகளுக்கு தடை
இதற்கிடையே அகில பாரதிய இந்து மகாசபா அமைப்பினர் சார்பில் மால் முன்பு சுந்தரகாண்டம் பாராயணம் செய்ய அனுமதி கோரப்பட்டது. இதற்கு நிர்வாகம் அனுமதி மறுத்த நிலையில் தான் சம்பவம் தொடர்பாக அந்த மால் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மால் பொது மேலாளர் சமீர் வர்மா கூறுகையில், ‛‛லுலு மால் நிர்வாகம் அனைத்து மதத்தினரையும் மதிக்கிறது. மாலில் மதம்சார் பிரார்த்தனைகளுக்கு அனுமதி இல்லை. இதனை கண்காணிக்க மால் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது'' என்றார்.

போலீஸ் வழக்குப்பதிவு
முன்னதாக மால் நிர்வாகத்துக்கு எதிராக இந்து அமைப்பு சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மால் ஊழியர்களில் 70 சதவீதம் பேர் முஸ்லிம்கள் என்றும், இதன்மூலம் லவ் ஜிகாத் செய்வதாகவும் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. மேலும் தொழுகை விஷயம் தொடர்பாக மால் நிர்வாகம் சார்பில் லக்னோ சுஷாந்த் கோல்ப் சிட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்படி இந்திய தண்டனை சட்டம் 153ஏ (மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 295ஏ (மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கம்) உள்பட சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

லுலு குழுமம் மால்
அபுதாபியை தலைமையிடமாக கொண்டு லுலு குழுமம் இயங்கி வருகிறது. இதன் நிர்வாக இயக்குனராக யூசுப் அலி உள்ளார். இந்த குழுமம் சார்பில் மத்திய கிழக்குநாடுகள், ஆசியா, அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் மால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவை பல்வேறு மாநிலங்களில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. கேரளாவில் கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் கர்நாடக தலைநகர் பெங்களூருக்கு பிறகு லக்னோவில் கடந்த 10ம் தேதி மால் துவங்கப்பட்டது. இந்த குழுமம் சார்பில் தமிழகத்திலும் விரைவில் சென்னை, கோவையில் மால் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications