வீடு திரும்பிய செவிலியர்.. பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்துக் கொலை.. உ.பி.யில் கொடூரம்
லக்னோ: கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் செவிலியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, துப்பட்டாவால் கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம், உத்தம்சிங் நகர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அப்பெண் செவிலியராகப் பணியாற்றி வந்துள்ளார். இவர் தனது 11 வயது மகளுடன் உத்தரப்பிரதேச மாநிலம், பிலாஸ்பூரில் தங்கி இருந்துள்ளார். அவர் மருத்துவமனையில் வேலை முடித்துவிட்டு தினமும் வீட்டுக்கு வந்துவிடுவது வழக்கம். ஆனால், ஜூலை 30 ஆம் தேதி மருத்துவமனையில் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய செவிலியர் வீட்டுக்குத் திரும்ப வரவில்லை.
இதையடுத்து, செவிலியரைக் காணவில்லை என அவரது சகோதரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அப்பெண் காணாமல்போன 8 நாட்களுக்குப் பிறகு அவரது வீட்டில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் அப்பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கொலையாளியைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், செவிலியரின் மொபைல் போன் சிக்னலின் அடிப்படையில் தர்மேந்திரா என்பவரைக போலீஸார் கைது செய்தனர். தர்மேந்திரா என்ற அந்த நபர் தினக்கூலியாக வேலை செய்து வந்துள்ளார். செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்த மொபைல் போன் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி ராஜஸ்தானுக்கு தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.
விசாரணையில், சம்வத்தன்று செவிலியர் மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் வந்துள்ளார். பின்னர், தனது வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். செவிலியர் தனியாக நடந்து செல்வதை மதுபோதையில் இருந்த தர்மேந்திரா பார்த்துவிட்டு, அவரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது, அவர் தங்கியிருந்த வீட்டுக்குள் நுழையும் முன்பு அவரது வாயைப் பொத்தி அருகில் உள்ள புதருக்குள் இழுத்துச் சென்றுள்ளார். அங்கு பாலியல் வன்கொடுமை செய்து, அவரது துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications