உ.பி.யில் மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா- அகிலேஷ் கட்சியில் இணைந்தார்! மொத்தம் 6 எம்.எல்.ஏக்கள் ஜூட்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர் தாராசிங் சவுகான் இன்று தமது பதவியை ராஜினாமா செய்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 6 பாஜக எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அமைச்சர் பதவியில் இருந்து விலகிய தாராசிங் சவுகான், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.
உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

அமைச்சர் ராஜினாமா
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் படுதீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆளும் பாஜகவுக்கு கடும் அதிர்ச்சி தரும் வகையில் அமைச்சர் ஸ்வாமி பிரசாத் மவுரியா நேற்று தமது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியிலும் ஸ்வாமி பிரசாத் மவுரியா இணைந்தார்.

எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து விலகல்
அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து மேலும் 4 பாஜக எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். உ.பி.யில் நேற்று மட்டும் 4 மணிநேரத்தில் 5 எம்.எல்.ஏக்கள் பாஜகவை விட்டு வெளியேறினர். இந்த நிலையில் இன்று மற்றொரு பாஜக அமைச்சர் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா
அமைச்சர் தாராசிங் சவுகான் தமது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார் தாராசிங் சவுகான். கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 6 எம்.எல்.ஏக்கள் பாஜகவை விட்டு வெளியேறி இருப்பது அக்கட்சி மேலிடத்தை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பாஜகவுக்கு பதிலடி
நாட்டின் பல மாநிலங்களில் பல கட்சிகளின் எம்.எல்.ஏக்களை பாஜகதான் வளைத்துக் கொண்டிருந்தது. கோவா, மணிப்பூர், கர்நாடகா, மத்திய பிரதேசம் என பல மாநிலங்களில் கொத்து கொத்தாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு ஆட்சி கவிழ்ப்புகளையும் நிகழ்த்தி இருக்கிறது பாஜக. ஆனால் இப்போது பாஜகவை விட்டு எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் சில மாதங்களுக்கு முன்னர் இதே போல பாஜக எம்.எல்.ஏக்கள் அக்கட்சியைவிட்டு வெளியேறி திரிணாமுல் காங்கிரஸில் இணைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications