பாஜக எம்பிக்கு 2 நாட்களில் தீர்ப்பு.. ஆனால் ராகுலுக்கு மட்டும் 4 மாதங்களா? ப.சிதம்பரம் சரமாரி கேள்வி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்பி குற்ற வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றிருந்த நிலையில், அவரது மேல் முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டு இரண்டே நாட்களில் அவரது தண்டனையை நிறுத்தி வைப்பதாக ஆக்ரா நீதிமன்றம் கூறியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் எட்டாவா எம்பி தொகுதியிலிருந்து பாஜக மூலம் நாடாளுமன்றத்திற்கு தேர்வானவர்தான் ராம் சங்கர் கத்தேரியா. இவர் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை வரை மனிதவள மேம்பாட்டுத் துறையில் (HRD) மத்திய இணை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். பட்டியல் சாதிகளுக்கான தலைவராகவும் இருந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு இவர் ஒரு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

அதாவது டோரன்ட் பவர் மின் விநியோக நிறுவனத்தின் மீதும், அதன் ஊழியர்கள் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக இவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கை விசாரித்து வந்த ஆக்ரா நீதிமன்றம் இவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த கடந்த 5ம் தேதி தீர்ப்பளித்தது. எம்பி/எம்எல்ஏக்களாக இருப்பவர்கள் குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றால் அவர்கள் அந்த பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.
மக்கள் பிரிதிநிதி சட்டம் இதற்கு வழிவகுக்கிறது. சமீபத்தில் காங்கிரஸின் ராகுல் காந்தி, 'மோடி' சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கை எதிர்கொண்டார். வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் உடனடியாக அவருடைய எம்பி பதவி பறிக்கப்பட்டது. அவர் தங்கியிருந்த எம்பி வீடும் பறிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு ஏறத்தாழ 4 மாத காலம் நடைபெற்றது.
இறுதியில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து அவருக்கு மீண்டும் எம்பி பதவி வழங்கப்பட்டது. ஆனால் உத்தரப் பிரதேச பாஜக எம்பி கத்தேரியா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 2 நாட்கள் ஆன பின்னரும் அவருடைய எம்பி பதவி பறிக்கப்படவில்லை. இந்நிலையில் அவர் 5ம் தேதியே மேல் முறையீடு செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தண்டனை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டுள்ளது.
தற்போது பாஜக எம்பிக்கு வழங்கப்பட்ட உத்தரவையும், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட உத்தரவையும் குறிப்பிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். அதாவது, "தாக்குதல் நடத்தியதற்காக தொடரப்பட்ட வழக்கில் எட்டாவாவைச் சேர்ந்த பாஜக எம்பி ராம் சங்கர் கத்தேரியா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனையை பெற்றார். ஆனால் 2-3 நாட்களுக்குள் ஆக்ரா நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து தண்டனையை நிறுத்தி வைத்தார்.
இதுவே ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க 4 மாதங்கள் தேவைப்பட்டது. அதுவும் உச்சநீதிமன்றத்தின் மூலம்தான் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தியாவில் நீதி வழங்கல் அமைப்பு மர்மமான வழிகளில் நகர்கிறது" என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications