தூள் கிளப்பும் அயோத்தி.. சர்வதேச தரத்தில் "மகரிஷி வால்மீகி விமான நிலையம்.." பிரமிக்க வைக்குதே!
லக்னோ: ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக, அயோத்தியில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி 22-ந் தேதி ராமர் கோவில் திறக்கப்படுகிறது. ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக, அயோத்தியில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. அந்த விமான நிலையத்தையும், புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையத்தையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்துள்ளார்.

இன்று காலை 11 மணியளவில், விமானம் மூலம் அயோத்திக்கு பிரதமர் மோடி வந்தார். பின்னர் பிரதமர் மோடி, அங்கிருந்து நேராக புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்துக்கு சென்றார். ரயில் நிலையம் வரை உள்ள 15 கி.மீட்டர் தூரத்திற்கு வாகன பேரணியாக சென்றார். அப்போது பிரதமர் மோடியை சாலையின் இருபக்கமும் நின்று பொதுமக்களும் கட்சி தொண்டர்களும் உற்சாகத்தோடு வரவேற்றனர்.
6 வந்தே பாரத் ரயில்: இதனால் இன்று அயோத்தி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டு இருந்தது. இதன் பின்னர் ரயில் நிலையம் சென்று புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து 2 அம்ரித் பாரத் ரயில்களை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வத்தார்.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி காணொலி வழியாக கோவை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் உள்பட 6 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அயோத்தி விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடி, விமான நிலையத்தை திறந்து வைத்தார்.
4 பாதைகள்: இதனை தொடர்ந்து விமான நிலையம் அருகே பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் மோடி பங்கேற்றார். அயோத்தி நகரில் ரூ.11 ஆயிரம் கோடி திட்டப்பணிகளையும், பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ராமர் கோவிலுக்கு செல்லும் 4 பாதைகள் அகலப்படுத்தப்பட்டு, அழகுபடுத்தப்பட்டுள்ளன. ராம பாதை, பக்தி பாதை, தர்ம பாதை, ராமஜென்மபூமி பாதை என்ற 4 பாதைகளையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

விழாக்கோலத்தில் அயோத்தி: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வட மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவி வந்த போதிலும், 2 நாட்களாக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
வால்மீகி விமான நிலையம்: அயோத்தி விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி விமான நிலையம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையமாக இந்த விமான நிலையம் ரூ.1,450 கோடியில் கட்டப்பட்டுள்ளது. 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள விமான நிலையத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிலையம் முழுவதும் வண்ண அலங்காரங்கள், கடவுள் ராமரின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் ஓவியங்கள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications