பால ராமரை வழிபடுகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு.. முதல் முறை.. அயோத்தி ராமர் கோவிலுக்கு நாளை விசிட்
லக்னோ: அயோத்தி ராமர் கோயிலுக்கு முதல் முறையாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை செல்கிறார். அயோத்தியில் உள்ள கோவில்களில் ஆரத்தி மற்றும் தரிசனம் செய்ய இருப்பதாக ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ராமர் கோயிலை மோடி திறந்து வைத்து கருவறையில் பாலராமர் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தார். அயோத்தி ராமர் கோவில் சிலை பிரதிஷ்டைக்கு முக்கிய பிரமுகர்கள் பலரும் அழைக்கப்பட்டு இருந்தனர்.

நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மதகுருமார்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் என முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பிதழ் நேரில் கொடுக்கப்பட்டன. முக்கிய பிரமுகர்கள் பலரும் ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்றனர். எனினும், ஜனாதிபதி திரவுபதி பங்கேற்கவில்லை. இது விவாதப்பொருளாகவும் மாறியது.
கோவில் திறந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தினமும் அயோத்தி ராமர் கோயிலில் பால ராமரை வழிபட நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயிலுக்கு முதல் முறையாக நாளை ஜனாதிபதி திரவுபதி முர்மு செல்கிறார். அயோத்தியில் உள்ள கோவில்களில் ஆரத்தி மற்றும் தரிசனம் செய்ய இருப்பதாக ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- அயோத்தி ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை பயணம் மேற்கொள்கிறார். தனது அயோத்தி பயணத்தின் போது ஸ்ரீ ஹனுமன் கர்கி கோவிலில் ஆரத்தி மற்றும் தரிசனம் செய்கிறார். அதேபோல பிரபு ஸ்ரீராம் கோவிலில் தரிசனம் செய்கிறார். அயோத்தி கோயிலுக்கு ஜனாதிபதி வருகை தர உள்ளதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications