"எங்க பீரங்கி சத்தமே போதும்.. பாகிஸ்தானே பஸ்பமாகிவிடும்.." சவால்விடும் முதல்வர் யோகி ஆதித்யநாத்
"எதிரி நாடுகளைக் கலக்கத்தில் ஆழ்த்தும் ஆயுதங்கள் இனி உத்தரபிரதேச மண்ணில் தயாராகப் போகின்றன. இனி உத்தர பிரதேசத்தில் தயாரிக்கப்படும் பீரங்களில் இருந்து வெளியாகும் குண்டுகளின் சத்தமே பாகிஸ்தானைப் பஸ்பமாக்கிவிடும்"
லக்னோ: உத்தரபிரதேசத்தில் தயாரிக்கப்படும் பீரங்கிகளில் இருந்து வெளியாகும் குண்டு சத்தமே பாகிஸ்தானை பஸ்மாக்கிவிடும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் சமீபகாலமாகப் பல முக்கிய திட்டங்களை மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக, ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்ய ஏதுவாக தொழிற்சாலைகள் அங்கு அமைக்கப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பு வழித்தடம் (Defence Corridor) என்ற பெயரில் அமைக்கப்படும் இந்த தொழிற்சாலைகள், உள்நாட்டு ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியைப் பல மடங்கு பெருக்கும் எனக் கூறப்படுகிறது.

குடும்ப ஆட்சியால் சீரழிவு
இந்நிலையில், அங்குள்ள புத்தல்கண்ட் பிராந்தியத்தில் பாரம்பரியமாக கொண்டாடப்படும் 'கலிஞ்சர் மகோத்சவ்' பண்டிகையை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: ஒருகாலத்தில் உத்தரப்பிரதேசம் என்பது நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய மாநிலமாக இருந்தது. குடும்ப ஆட்சியும், ஜாதி ஆட்சியும் (சமாஜ்வாதி, பகுஜன் சமாஜை குறிப்பிடுகிறார்) மாநிலத்தைச் சீரழித்து வந்தன. மக்களுக்கான எந்த வளர்ச்சி திட்டங்களையும் அவை செய்யவில்லை. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் சொத்து சேர்ப்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தனர்.

உபி முகத்தை மாற்றிய பாஜக
ஆனால், உத்தரப் பிரதேசத்தில் எனது தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது முதலாக மாநிலத்தின் முகம் மாறத் தொடங்கியது. "மக்கள் மட்டுமே பிரதானம்" என்ற ஒற்றை முழக்கத்துடன் தற்போது இங்கு ஆட்சி நடந்து வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியாளர்களால் தீண்டப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்ட புந்தல்கண்ட் பிராந்தியத்துக்கு பாஜக ஆட்சியில் தனிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள தாய்மார்கள் குடிநீர் எடுக்கப் பல கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டி இருந்தது. ஆனால், இன்றோ வீட்டுக்கே தண்ணீரை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம்.

"பாகிஸ்தான் காணாமல் போகும்"
இதையெல்லாம் தாண்டி, பாஜக ஆட்சிக்காலத்தில் தேசிய முக்கியத்துவம் பெறும் மாநிலமாக உத்தரப்பிரதேசம் மாறியுள்ளது. பாதுகாப்பு வழித்தடங்கள் இங்கு அமைக்கப்படுவதன் மூலம் நாட்டின் பாதுகாப்பில் உத்தரப்பிரதேசம் பங்காற்ற போகிறது. எதிரி நாடுகளைக் கலக்கத்தில் ஆழ்த்தும் ஆயுதங்கள் இனி உத்தரப்பிரதேச மண்ணில் தயாராகப் போகின்றன. இனி உத்தரபிரதேச்தில் தயாரிக்கப்படும் பீரங்களில் இருந்து வெளியாகும் குண்டுகளின் சத்தமே பாகிஸ்தானை பஸ்பமாக்கிவிடும். அந்த நாடு உலக வரைபடத்தில் இருந்தே காணாமல் போய்விடும்.

"ஆட்சியில் பாஜக இருப்பது அவசியம்"
இத்தகைய சிறப்பு வாய்ந்த மாநிலமாக உத்தரப்பிரதேசம் உருவெடுத்துள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்குத் தான் நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். தனது ஒவ்வொரு அசைவிலும் உத்தரப்பிரதேசம் பற்றிய சிந்தனையையே மோடி கொண்டிருக்கிறார். இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக உத்தரப்பிரதேசத்தைக் கொண்டு வர வேண்டும்; இங்குள்ள இளைஞர்கள் வேறு எந்த மாநிலத்திற்கும் வேலை தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படக் கூடாது என்ற கனவுகளை நனவாக்க மோடி பாடுபட்டு வருகிறார். எனவே மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி இருப்பதை உத்தரப்பிரதேச மக்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.












Click it and Unblock the Notifications