ஷாருக்கான் நாக்கை வெட்டினால் ரூ.1 லட்சம்.. இந்து மகாசபை தலைவர் அறிவிப்பால் சர்ச்சை
டெல்லி: வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக வன்முறை அரங்கேறி வருகிறது. இதற்கிடையே தான் ஐபிஎல் போட்டிக்காக கேகேஆர் அணியில் வங்கதேசத்தை சேர்ந்த முஸ்தாபிசுர் ரஹ்மான் விளையாட உள்ளார். இதற்கு இந்துத்துவா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் கேகேஆர் அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக்கானின் நாக்கை வெட்டி எடுத்து வருவோருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாக இந்து மகாசாபையின் தலைவர் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
2026ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை கேகேஆர் எனும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. அவர் ரூ. 9.20 கோடிக்கு ஏலம் வாங்கப்பட்டது. இந்த கேகேஆர் அணியின் உரிமையாளராக நடிகர் ஷாருக்கான் உள்ளார்.

தற்போது வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக வன்முறைகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது. 4 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனை அங்குள்ள இடைக்கால அரசு கண்டுக்கொள்ளாமல் உள்ளது.
இந்நிலையில் தான் வங்கதேசத்தை கண்டித்து நம் நாட்டில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. டெல்லியில் உள்ள வங்கதேசத்தின் தூதரக அலுவலகம் இந்துத்துவ அமைப்பினரால் முற்றுகையிடப்பட்டது. இதற்கிடையே தான் தற்போது இந்துத்துவ அமைப்பினர் ஷாருக்கானை நோக்கி திரும்பி உள்ளனர். ஐபிஎல்லில் கேகேஆர் அணிக்கு வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை ஏலம் எடுத்ததற்கு எதிராக விமர்சனம் செய்து வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தை சேர்ந்தவர் மீரா ராதோர். இவர் அகில இந்திய இந்து மகாசபையின் தலைவராக உள்ளார். இவர் வழக்கு ஒன்றுக்காக மதுரா சென்றிருந்தார். அப்போது அளித்த பேட்டியில் கூறியதாவது:
‛‛வங்கதேசத்தில் நம்முடைய இந்து சகோதரர்கள் உயிருடன் எரித்து கொல்லப்படுகின்றனர். நடிகர் ஷாருக்கான் நாக்கை வெட்டி எடுத்து வருவோருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். ஆனால் ஷாருக்கான் வங்கதேச வீரரை ஐபிஎல் போட்டியில் விளையாட ஏலம் எடுத்துள்ளது.
இன்று ஷாருக்கான் முகத்தில் கருப்பு மை பூசி என் செருப்பால் அடித்தேன். இனியும் இப்படி நடந்தால் நாங்கள் சும்மா விடமாட்டோம். ஷாருக்கானின் நாக்கை வெட்டி கொண்டு வருவோருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்'' என்று கோபத்தை கொப்பளித்தார்.
இவரது இந்த கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது. மேலும் அவர் அங்கிருந்த ஷாருக்கானின் போஸ்டரில் கருப்பு மை பூசியதோடு, செருப்பால் அடித்து கோபத்தை வெளிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications