சனாதன தர்மமே தேசிய மதம்.. கும்பமேளாவில் எந்த பாகுபாடும் கிடையாது.. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்!
லக்னோ: சனாதன தர்மம் தான் நமது தேசிய மதம் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். சனாதன தர்மத்தை விமர்சிக்கும் அனைவரும் தாமாகவே முன்வந்து மகா கும்பமேளாவை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், இங்கு எந்த பாகுபாடும் காட்டப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல் ஒழிக்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன்பின் உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு மாநில காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது.

உத்தரப் பிரதேச மாநில பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகளும் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம். இந்த திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நிகழ்ச்சி நடந்து வருகிறது. நடப்பாண்டில் ஜனவரி 12ஆம் தேதி தொடங்கிய கும்பமேளா, பிப்.26ஆம் தேதியான மகா சிவராத்திரி வரை நடைபெறவுள்ளது. இதற்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பலரும் வந்துள்ளனர்.
இதுவரை மட்டும் 11 கோடிக்கும் அதிகமான மக்கள் மகா கும்பமேளாவிற்கு வந்து திரிவேணி சங்கத்தில் புனித நீராடியுள்ளனர். இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சனாதன தர்மம் குறித்து பேசி இருக்கிறார். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த யோகி ஆதித்யநாத், சனாதன தர்மம் தான் இந்தியாவின் தேசிய மதம்.
மகா கும்பமேளா என்பது எந்தவொரு சாதி, மதத்திற்கு உரியது அல்ல. இது அனைத்து மதம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் கலவை. அதனால் தான் சனாதன தர்மம் நம் தேசிய மதம். இதே வார்த்தைகளை நான் முன்பும் கூறி இருக்கிறேன். மனிதகுலத்தின் மதமும் அதுதான். மக்கள் வழிபடும் முறைகளில் வேண்டுமானால் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் மதம் எப்போது ஒன்று தான். அந்த மதம் சனாதன தர்மம். கும்பமேளாவே சனாதன தர்மத்தின் பிரதிநிதி என்று சொல்வேன்.
மகர் சங்ராந்தியான ஜனவரி 14ஆம் தேதியன்று மட்டும் 6 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளா மக்களிடையே ஒற்றுமையை கொடுத்துள்ளது. இங்கு யாரிடமும் எந்த பாகுபாடும் காட்டப்படுவதில்லை. சனாதன தர்மத்தை விமர்சிக்கும் நபர்கள் அனைவரும் இங்கு வந்து பார்க்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம். திருதராஷ்டிரனை போல் இருக்காமல், மகா கும்பமேளாவை நேரில் வந்து நீங்களாவே பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications