'ஹாப்பி' அறிவிப்பு வந்தாச்சு.. ஆக்கிரமிப்பு அகற்றமா? யோகியின் புது அதிரடி.. உ.பி. வணிகர்கள் வரவேற்பு
சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளின்போது சேதப்படுத்தப்பட்ட கடைகளுக்கு மாற்றாக புதிய கடைகள் வழங்கப்படும் என உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சாலை விரிவாக்க பணிகளில் பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு புதிய கடைகளை ஒதுக்கி தர வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநில உட்கட்டமைப்பு வளர்ச்சியில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிலும் இதற்காக கூடுதல் நிதியை அரசு ஒதுக்கியிருந்தது. இப்படி இருக்கையில், இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதில் சாலை விரிவாக்க பணிகளும் அடங்கும். அதாவது தேசிய தலைநகரை போல மாநில தலைநகரையும் மேம்படுத்தும் திட்டத்தை யோகி ஆதித்யநாத் முன்மொழிந்துள்ளார்.
இதன்படி மாநில தலைநகரான லக்னோ மற்றும், மாவட்ட தலைநகரங்களை சீரமைக்கும் பணிகளில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். வேலை வாய்ப்புக்கள், மருத்துவமனைகள் என பல்வேறு வசதிகளை தேடி மக்கள் மாநில மற்றும், மாவட்ட தலைநகரங்களை நோக்கி வருகின்றனர். எனவே இதற்கேற்றார் போல கட்டமைப்புகள் முறையாக இல்லாததால் நகரங்களுக்குள் வரும் மக்கள் கடும் நெருக்கடியினை சந்தித்து வருகின்றனர். இவற்றை மனதில் கொண்டே இந்த மறு கட்டமைப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைளில் சாலை விரிவாக்க பணிகளும் ஒன்றாகும். இந்த பணியின் போது நடைபாதைகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். தங்களுக்கு மீண்டும் கடை வைக்க இடம் ஒதுக்கி தரப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இது குறித்து சாலையோர வியாபாரிகள் கூறுகையில், "எங்களுக்கு இதைவிட்டால் வேறு தொழில் தெரியாது. தற்போது சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் எங்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. சாலை விரிவாக்க பணிகள் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.
எனவே மீண்டும் நாங்கள் குறிப்பிட்ட இடங்களில் கடை வைக்க மாநில அரசு அனுமதி வழங்குவதோடு ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் போது சேதமடைந்த கடைகளை புதியதாக அமைத்தும் கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர். இதனையடுத்து நேற்று அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட யோகி ஆதித்யநாத், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையின்போது சேதப்படுத்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு விரைவில் புது கடைகள் ஒப்படைக்கப்படும் என்று கூறியுள்ளார். கவுஷ்லேஷ் குஞ்ச், அமானிகஞ்ச் ஆகிய பகுதிகளில் தற்போது புதிய கடைகள் கட்டப்பட்டு வருகிறது.
எதிர்வரும் 2047 ஆண்டுக்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தை புதியதாக மாற்றுவதற்கு பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களின் ஒரு அங்கம்தான் சாலை விரிவாக்க பணிகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications