“இதை கட்டலைனா ரத்தம் கக்கி சாவீங்க“.. உ.பி மருத்துவமனையில் மந்திரவாதியை வைத்து சிகிச்சை.. கொடுமை
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு பேயோட்டும் மந்திரவாதிகள் சிகிச்சை அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையிலும் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.
மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் உண்மையெனில் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

உத்தரப் பிரதேச மருத்துவமனை
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜின் குளோபல் மருத்துவமனையில் நோயாளிக்கு ரத்த பிளாஸ்மாவுக்கு பதில், சாத்துக்குடி ஜூஸ் ஏற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவிய நிலையில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு மீது பலரும் கடும் விமர்சனத்தை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, மஹோபா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் பேயோட்டும் மந்திரவாதிகள் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துள்ளனர்.

மந்திரவாதி
மஹோபா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு இந்த மந்திரவாதிகள் சிகிச்சையளிக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளன. வீடியோவில் மந்திரவாதி ஒருவர் நோயாளி ஒருவரின் கைகளை பிடித்து மந்திரம் முணுமுணுத்து ஏதோ செய்கிறார். பின்னர் நோயாளியின் கைகளை உதற சொல்கிறார். மற்றொரு வீடியோவில் இளம்பெண் ஒருவரின் காதில் வாய் வைத்து ஏதோ செய்கிறார் பின்னர் அவரின் கைகளையும் உதற சொல்கிறார்.

தாயத்து
இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், "இங்கு பலரும் மந்திரவாதிகளை நாடுகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் தேள் கொட்டிவிட்டதாக ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்திருந்தார். ஆனால் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனையடுத்து ஒரு மந்திரவாதி வந்து ஏதோ மந்திரம் சொல்லி 'தாயத்து' கட்டி விட்டிருந்தார். பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பலரும் மந்திரவாதிகளை எதிர்பார்க்கின்றனர்" என்று கூறியுள்ளார்.

விளக்கம்
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் ஊடகவியலாளர்கள் விளக்கம் கேட்டதற்கு, குற்றச்சாட்டை அடியோடு நிர்வாகம் மறுத்துள்ளது. வீடியோக்களை காட்டி மீண்டும் கேள்வியெழுப்பியதற்கு, "இது குறித்து விசாரிக்கப்படும். இந்த சம்பவம் உண்மை எனில் இதில் தொடர்புடைய மருத்துவமனை ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. வழக்கமாக மருத்துவமனைகளில் கன்னியாஸ்திரிகள் இது போன்று ஜெபம் செய்வார்கள். சிலருக்கு இது நம்பிக்கையளிப்பதாக இருந்தாலும், மக்களின் இயலாத நிலையை பயன்படுத்தி மத போதகம் செய்கிறார்கள் என்று பலர் விமர்சிக்க தொடங்கினர். இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் மந்திரவாதிகளை கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications