"கிழிஞ்ச ரூபா நோட்ட வாங்க மாட்டியா" - டெலிவரி ஊழியரை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்கள்! பகீர் சம்பவம்
லக்னோ: கிழிந்திருந்த ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்த பீட்சா டெலிவரி ஊழியரை இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக நாட்டில் உணவு டெலவரி செய்யும் நபர்கள் தாக்கப்படும் சம்பவங்களும், அவமானப்படுத்தப்படும் சம்பவங்களும் அன்றாடம் அரங்கேறி வருகின்றன. பட்டப்படிப்புகளை படித்திருந்தாலும் உரிய வேலைவாய்ப்பு கிடைக்காததால் ஸ்விகி, சொமாட்டோ போன்ற உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களில் ஏராளமான இளைஞர்கள் டெலிவரி ஊழியர்களாக தற்போது வேலை செய்து வருகின்றனர். காலை முதல் நள்ளிரவு வரை, நகரங்களின் பல்வேறு பகுதிகளில் ஓய்வே இல்லாமல் இந்த டெலிவரி ஊழியர்கள் உணவுகளை விநியோகம் செய்து வருவதை நாம் பார்க்க முடியும். தாங்கள் கூட சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் மற்றவர்களுக்கு உரிய நேரத்தில் உணவு டெலிவரி செய்யும் இவர்களை நம் சமூகம் தொடர்ந்து அவமதித்து வருகின்றன. சில நேரங்களில் உணவு டெலிவரி செய்ய சிறிது தாமதமானால் கூட இவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகளும் நடைபெறுவது உண்டு.

அப்படியொரு மனிதாபிமானமற்ற சம்பவம்தான் உத்தரபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள ஷாஜகான்பூரில் உள்ள பரேலி பகுதியைச் சேர்ந்தவர் நதீம் (27). பால் பண்ணை நடத்தி வரும் இவர், நேற்று இரவு 11 மணிக்கு பீட்சா ஆர்டர் செய்துள்ளார். கடை மூடப் போகும் சமயம் என்றும் கூட கருதாமல் சச்சின் காஷ்யப் என்ற டெலிவரி ஊழியர் அவரது ஆர்டரை எடுத்துள்ளார்.
பின்னர் அரக்க பறக்க ஓட்டலுக்கு சென்று பீட்சாவை வாங்கிக் கொண்டு 10 கி.மீ. தூரம் பைக்கில் பயணித்து நதீமிடம் பீட்சாவை அவர் டெலிவரி செய்துள்ளார். இதையடுத்து, பீட்சாவுக்கான பணத்தை சச்சினிடம் நதீம் கொடுத்திருக்கிறார். ஆனால், அவர் கொடுத்த பல ரூபாய் நோட்டுகள் மிகவும் கிழிந்த நிலையில் இருந்துள்ளன. இதனால் கிழிந்த நோட்டுகளுக்கு பதிலாக வேறு நோட்டுகளை தருமாறு சச்சின் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நதீம், சச்சினை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் வழிந்துள்ளது. எனினும், அவரை விடாமல் தாக்கியுள்ளார் நதீம். இந்த சத்தத்தை கேட்டு வெளியே வந்த நதீமின் சகோதரர் சையது, தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சச்சின் காஷ்யப்பை சுட்டுள்ளார். இதில் துப்பாக்கி குண்டு சச்சினின் வயிற்றில் பாய்ந்ததில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் சச்சினை மீட்டு அருகில் உள்ள மருத்துவனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார், சச்சின் காஷ்யப்பை துப்பாக்கியால் சுட்ட சையது மற்றும் அவரை அடித்து உதைத்த நதீம் ஆகியோரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications