சட்டவிரோத ஆயுத வழக்கு: உ.பி. பாஜக அமைச்சர் ராகேஷ் சச்சனுக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை!
லக்னோ: சட்டவிரோத ஆயுத வழக்கில் உத்தரப்பிரதேச மாநில பாஜக அமைச்சர் ராகேஷ் சச்சனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கான்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசில் அமைச்சராக இருப்பவர் ராகேஷ் சச்சன். 1990களில் சமாஜ்வாதி கட்சியில் இருந்த ராகேஷ் சச்சன், ஃபதேபூர் லோக்சபா தொகுதி எம்.பி.யாக வெற்றி பெற்றவர். பின்னர் சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி காங்கிரஸுக்குப் போனார். பின்னர் பாஜகவில் இணைந்தார்.

ராகேஷ் சச்சன் மீது 30 ஆண்டுகளாக சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இவ்வழக்கில் கான்பூர் நீதிமன்றம், ராகேஷ் சச்சன் குற்றவாளி என அதிரடி தீர்ப்பளித்தது. கான்பூர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கிய போது திடீரென ராகேஷ் சச்சன் நீதிமன்றத்தைவிட்டு வெளியேறி தலைமறைவானது சர்ச்சையானது. ஆனால் தாம் தலைமறைவாகவில்லை என்றும் தம்மைப் பற்றி வதந்திகளை சில ஊடகங்கள் கிளப்பிவிடுவதாகவும் ராகேஷ் சச்சன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சட்டவிரோத ஆயுத வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ராகேஷ் சச்சனுக்கான தண்டனை விவரங்களை கான்பூர் நீதிமன்றம் இன்று அறிவித்தது. ராகேஷ் சச்சனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கான்பூர் கோர்ட் இன்று அதிரடியாக தீர்ப்பளித்திருக்கிறது. மேலும் ரூ1,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ராகேஷ் சச்சன், சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில ஊடகங்கள் தவறாக சித்தரித்து எழுதுகின்றன என்றார்.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிஷாத் கட்சித் தலைவரான சஞ்சய் நிஷாத்தும் வழக்கு ஒன்றில் சிக்கி இருக்கிறார். சஞ்சய் நிஷாத்துக்கு எதிரான வழக்கில் கோரக்பூர் நீதிமன்றம், ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
உ.பி. யோகி ஆதித்யநாத் அமைச்சரவை சகாக்கள் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி இருப்பதும் நீதிமன்றங்களில் தண்டிக்கப்படுவதும் அம்மாநில அரசியலில் விவாதப் பொருளாகி இருக்கிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் கூறுகையில், சர்ச்சைக்குரிய குற்றப் பின்னணி கொண்ட அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்தாக வேண்டும் என்றனர். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கூறுகையில், நீதிமன்றத்தில் நின்று கொண்டிருந்த அமைச்சர் ராகேஷ் சச்சன், காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வெல்ல ஓடிப் போயிருப்பார்; அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றனர்.












Click it and Unblock the Notifications