உ.பி.யின் தேமுதிகவாக கூட்டணிக்கு அலைபாயும் ராஜ்பார்.. அங்கிட்டு பாஜக... இங்கிட்டு அகிலேஷுடன் பேச்சு!
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் திடீரென பாஜக பக்கம் போனார் மாநில கட்சியான எஸ்.பி.எஸ்.பி.-ன் தலைவரான ராஜ்பார். இப்போது பாஜகவை மாநிலத்தை விட்டே துரத்துவேன் என்கிறார். அத்துடன் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் தமது தலைமையிலான 10 கட்சி கூட்டணியை சேர்ப்பதற்கும் கதவை திறந்து வைத்திருக்கிறார் ராஜ்பார்.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் களத்தைப் பார்க்கும் நமக்கு இயல்பாகவே தமிழக தேர்தல் கூத்துகள் நினைவில் வந்துவிடுகின்றன. அதிலும் உத்தரப்பிரதேசத்தின் ராஜ்பார் நடத்தி வரும் அதகள கூத்துகள் அடேங்கப்பா என சொல்ல வைத்துவிடுகிறது.
ஓம் பிரகாஷ் ராஜ்பார்... உ.பி.யின் பிற்படுத்தப்பட்ட ராஜ்பார் சமூகத்தைச் சேர்ந்தவர். 2002-ம் ஆண்டு சுகெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியை தொடங்கினார். உ.பி., பீகார் தேர்தல்களில் தொடர்ந்து களம் கண்டு வருகிறார். ஆனால் அப்படி ஒன்றும் பெரிதாக சாதிக்கவும் இல்லை. 2017-ம் ஆண்டு உ.பி. தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது ராஜ்பாரின் கட்சி. அந்த தேர்தலில் 4 எம்.எல்.ஏக்கள் கிடைத்ததால் முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம்பெற்றார் ராஜ்பார்.

உ.பி. மெகா கூட்டணி
ஆனால் 2019 லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிராக 39 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கினார் ராஜ்பார். இதனையடுத்து ராஜ்பாரின் உ.பி. அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 10 மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணியை உருவாக்கினார் ராஜ்பார். இந்த கூட்டணியில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியும் இணைந்து இருந்தது. மேலும் 100 தொகுதிகளில் போட்டியிடப் போவதாகவும் ஓவைசி அறிவித்திருந்தார். உ.பி. தேர்தல் களத்தில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளைத் தொடர்ந்து 5-வது அணியாக ராஜ்பாரின் மெகா கூட்டணி களத்தில் இருந்தது.

அகிலேஷுக்கு தூது
இந்த நிலைமை எல்லாம் வடிவேலு பாணியில் சொன்னால் அது போனவாரம்.. இது இந்த வாரம் என்கிற கதையாகத்தான் இருக்கிறது. 2 வாரங்களுக்கு முன்னர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறேன்; எங்களுடைய 7 நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் போதும் என்றார் ராஜ்பார். இதற்கு அவரது மெகா கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஓவைசி கட்சியும் ஓகே சொன்னது. அகிலேஷ் யாதவும் ஏற்கனவே சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க எப்போதுமே தயார் என க்ரீன் சிக்னல் கொடுத்திருந்தார். இதனால் உ.பி. தேர்தல் களம் பரபரப்பானது.

பாஜக தலைவர்களுடன் சந்திப்பால் சர்ச்சை
ஆனால் திடீரென உ.பி. பாஜக தலைவர்களை ராஜ்பார் நேரில் சந்தித்து பேச அத்தனையும் டமார் என்றாகிவிட்டது. பாஜக தலைவர்களுடனான ராஜ்பாரின் சந்திப்பை ஓவைசி கட்சியின் உ.பி. மாநிலத் தலைவர் செளகத் அலி கடுமையாக விமர்சித்திருந்தார். ராஜ்பாரின் இந்த அரசியல் போக்கை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறிய கையோடு அகிலேஷின் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணிக்கான சிக்னலையும் கொடுத்தது ஓவைசி கட்சி. இது ஒருபுறம் இருக்க இந்தியா டுடே உ.பி. சட்டசபை தேர்தல் தொடர்பாக ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது. அதில் ராஜ்பார் பேசியதுதான் அத்தனை பேரையும் மிரள வைத்திருக்கிறது.

பாஜகவுக்கு எதிராக பேச்சு
இந்த நிகழ்ச்சியில் ராஜ்பார் பேசியதாவது: நான் பாஜக தலைவர்களை அடிக்கடி சந்தித்து பேசுகிறேன். ஆனாலும் பாஜகவை எதிர்த்துதான் தேர்தலில் போட்டியிடுவேன். என்றைக்கு உ.பி. அமைச்சரவையில் இருந்து நான் தூக்கி எறியப்பட்டேனோ அன்றே... இந்த மாநிலத்தில் இருந்து பாஜகவை விரட்டி அடிக்காமல் ஓயப்போவதில்லை என சபதம் எடுத்திருக்கிறேன். உ.பி. பாஜக தலைவர் ஸ்வந்திர தேவ் சிங்கை 4 முறை நான் சந்தித்து பேசி இருக்கிறேன். 2022 சட்டசபை தேர்தலில் சிறிய கட்சிகள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத்தான் போகிறது. உத்தரப்பிரதேசத்தில் இருந்து பாஜகவை துரத்தி அடிக்க 403 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வேன். இவ்வாறு ஆவேசமாக பேசினார் ராஜ்பார்.

அங்கிட்டு இங்கிட்டு என அலைபாயும் கட்சி
என்னதான் ராஜ்பார் இப்படி ஆவேசமாக பேசினாலும் அவர் மீதான நம்பகத்தன்மை பொதுவாக தகர்ந்துவிட்டது. தமிழகத்தில் இதேபோல் இரு பிரதான கட்சிகளான திமுக- அதிமுகவுடன் ஒரே நேரத்தில் கூட்டணி பேசிய கட்சியாக தேமுதிக இருந்தது. திமுகவை மேடைகளில் வெளுத்து வாங்கிக் கொண்டே திரை மறைவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது தேமுதிக. அதிமுக கூட்டணியில் இருக்கிறோம் என கூறிக் கொண்டே அதிமுகவை விமர்சித்துவிட்டு அமமுகவுடன் கூட்டணி வைத்தது தேமுதிக. இதேபோன்ற கூத்தைத்தான் இப்போது உ.பி. தேர்தல் களத்தில் ஓம்பிரகாஷ் ராஜ்பார் அரங்கேற்றி வருகிறார்.












Click it and Unblock the Notifications