ஹாஸ்பிடலில் மனைவிக்கு படுக்கையில்லை: எனக்கே இப்படினா எளியமக்களின் நிலை? பொங்கிய உ.பி. பாஜக எம்.எல்.ஏ
லக்னோ: கொரோனா தொற்றுக்கு உள்ளான தனது மனைவி ஆக்ராவில் உள்ள எஸ்.என் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 மணி நேரமாக படுக்கைக்கு காத்திருந்தார் என்று உத்தர பிரதேச பா.ஜ.க எம்.எல்.ஏ ராம்கோபால் லோதி குற்றம்சாட்டி உள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் கொடிய ஆக்டோபஸ் கரங்கள் கொடூரமாக பரவி கிடக்கிறது. முதல் அலையை விட 2-வது அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது.
பல்வேறு மாநிலங்களில் மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு என நாடே தள்ளாடி வருகிறது.

உத்தர பிரதேசம் நிலைமை மோசம்
பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆட்சி புரியும் உத்தர பிரதேசத்தில் நிலைமை மேலும், மேலும் மோசமாகிக் கொண்டு செல்கிறது. லக்னோ, கான்பூர் நகர், வாரணாசி, பிரயாகராஜ், மீரட், புத்த நகர், கோரக்பூர், காஜியாபாத், பரேலி மற்றும் மொராதாபாத் ஆகிய மாவட்டங்கள் கடும் தொற்றுக்கு உள்ளாகி மோசமான நிலையில் உள்ளன.

மருத்துவ கட்டமைப்புகள் படுமோசம்
உத்தர பிரதேசத்தில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளிகளுக்கு படுக்கைகள் கிடைப்பதில்லை. மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளும் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்து வருகின்றனர். தொற்றுக்கு தொற்றுக்கு ஆளான மக்களுக்கு தடுப்பூசி கூட செலுத்த முடியாத அளவுக்கு அங்குள்ள மருத்துவ கட்டமைப்புகள் மிக மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

பா.ஜ.க எம்.எல்.ஏ குற்றச்சாட்டு
உத்தர பிரதேசத்தில் புண்ணிய நதியான கங்கை, யமுனையில் தினமும் சடலங்கள் மிதந்து வருவதை பார்க்க முடிகிறது. கொரோனாவில் யோகி அரசின் செயல்பாடு குறித்து பாஜகவின் எம்.பி., எம்.எல்.ஏ.க்களே தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் உத்தர பிரதேச ஃபிரோசாபாத் ஜஸ்ரானா தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ ராம்கோபால் லோதி, கொரோனா தொற்றுக்கு உள்ளான தனது மனைவி, ஆக்ராவில் உள்ள எஸ்.என் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், படுக்கைக்காக சுமார் 3 மணி நேரம் காத்திருந்தார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

படுக்கை தரவில்லை
இது தொடர்பாக ராம்கோபால் லோதி சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ' ஆக்ராவில் உள்ள எஸ்.என் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனைவியை சேர்க்க சென்றபோது அவர்கள் 3 மணி நேரம் படுக்கை தரவில்லை. என்னுடைய மனைவியை தரையில் படுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

அப்போ மக்களின் நிலை?
எனது மனைவி 3 மணி நேரம் காத்திருந்தபோது அவருக்கு மருத்துவமனை ஊழியர்கள் மருந்து கொடுக்கவில்லை. ஏன் தண்ணீர் கூட தரவில்லை. 3 மணி நேரம் கழித்து மாவட்ட மாஜிஸ்திரேட்டு தலையிட்ட பின்புதான் படுக்கை கிடைத்தது. ஒரு எம்.எல்.ஏ.வின் மனைவிக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலைமை எப்படி இருக்கும்? என்று வீடியோவில் ராம்கோபால் லோதி கூறினார். இந்த வீடியோ பதிவை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் உத்தர பிரதேச அரசை கடுமையாக சாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications