உத்தர பிரதேசத்தில் உதயமாகப் போகும் "மும்பை.." வாக்குறுதி கொடுத்த யோகி ஆதித்யநாத்!
லக்னோ: மும்பை திரைப்பட நகரத்தை உத்தரப்பிரதேசத்துக்கு கொண்டு வருவோம் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.உத்தரப்பிரதேசத்தில் முதற்கட்ட தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில், அங்கு அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அடுத்து நடைபெறவுள்ள இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார். ஒரே நாளில் பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்.

யோகி ஆதித்யநாத்
கஸகஞ்சில் இன்று நடந்த பொதுக்கூட்டதில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ''மும்பையின் திரைப்பட நகரத்தை இங்கு கொண்டு வருகிறோம். இளைஞர்களுக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் நினைவாக அகாடமியை உருவாக்கவும் முடிவு செய்துள்ளோம். பாகுபாடின்றி அனைவருக்கும் நலத்திட்டங்களை வழங்கியுள்ளோம்'' என்றார்.

எங்கே போனார்கள்
''நமது 'இரட்டை இயந்திரம்' அரசு மற்ற அரசுகளை விட இரட்டிப்பு வேகத்தில் செயல்படுகிறது. கோவிட் காலத்தில், அண்ணன்-சகோதரி இருவரும் எங்கே இருந்தார்கள். உங்கள் அனைவரிடமும் 'பெஹன்ஜி' இருந்தாரா. மாநில மக்களுக்காக பாஜக மட்டுமே உழைத்தது'' என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், புடானில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. முதற்கட்டத் தேர்தல் நேற்று நடந்தது.
இரண்டாம் கட்ட தேர்தல் பிப்ரவரி 14, மூன்றாம் கட்டம் பிப்ரவரி 20, நான்காம் கட்டம் பிப்ரவரி 23, ஐந்தாம் கட்டம் பிப்ரவரி 27, ஆறாம் கட்டம் மார்ச் 3, ஏழாம் கட்டத் தேர்தல் மார்ச் 7ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடக்கிறது.

தேர்தல்
உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. பாஜக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என நான்கு முனை போட்டி உத்தரப்பிரதேசத்தில் நிலவுகிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பின் படி, உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவித்துள்ளது. ஆனாலும், சமாஜ்வாடி கட்சி பாஜகவுக்கு பலத்த போட்டியைக் கொடுத்துவருகிறது.












Click it and Unblock the Notifications