முதலீட்டாளர்களை பாதுகாப்பதே.. உபி அரசின் முக்கிய கடமை.. முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி
லக்னோ: உத்தரபிரதேசத்தில் தொழில் தொடங்கும் முதலீட்டாளர்களையும், அவர்களின் முதலீடுகளையும் பாதுகாப்பதே அரசின் முக்கியக் கடமை என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் கடந்த ஓராண்டாக புதிய புதிய தொழில் நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் கால் பதித்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக, உபியில் உள்ள சில மாவட்டங்களை தொழிற்பேட்டைகளாக தரம் உயர்த்தும் நடவடிக்கையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், கோரக்பூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த இரும்பு தொழிற்சாலையை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: உத்தரபிரதேசத்தில் கடந்த 2017-ம் ஆண்டுக்கு முன்பு வரை (சமாஜ்வாதி ஆட்சிக்காலம்), புதிய தொழிற்சாலைகளையும், தொழில் நிறுவனங்களையும் தொடங்குவதற்கே முதலாளிகள் பயந்தனர். அப்படியே துணிச்சலாக தொழில் நிறுவனங்களை தொடங்கினாலும், சில கட்சிகளை சேர்ந்த ரவுடிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் அவர்கள் லட்சக்கணக்கில் பணம் தர வேண்டிய சூழல் இருந்தது.
அதுமட்டுமல்லாமல், அரசாங்கமும் தனது பங்குக்கு அந்த தொழில் நிறுவனங்களிடம் இருந்து வரி என்ற பெயரில் கோடிக்கணக்கிலான ரூபாயை வலுக்கட்டாயமாக பறித்துக் கொண்டிருந்தது. மேலும், தொழிற்சாலை முதலாளிகள் கடத்தப்படுவதும், மிரட்டப்படுவதுமான நிலை இருந்தது. இதனால் உபியில் இருந்து பல தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் வெளியேறின. ஆனால், உபியில் பாஜக ஆட்சி மலர்ந்ததில் இருந்து காட்சிகள் மாறின. ரவுடிகள் வேட்டையாடப்பட்டனர். சமூக விரோதிகள் விரட்டியடிக்கப்பட்டனர். அதனால் உபியில் சட்டம் ஒழுங்கு சீரானது.
உபியில் இனி தங்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்ற நம்பிக்கையின் பேரில், நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் இங்கு வரத் தொடங்கியுள்ளன. அதன் வெளிப்பாடாகவே, அண்மையில் உபியில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.33.50 லட்சம் கோடியை நாம் ஈர்த்துள்ளோம். உபியில் அமையும் தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் பெருமளவு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் பல நிறுவனங்கள் தற்போது உபியில் தொழில் தொடங்க போட்டிப்போட்டு வருகின்றன. இதனால் உபி இளைஞர்களுக்கு இனி அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். முதலீட்டாளர்களையும், அவர்களின் முதலீடுகளையும் பாதுகாப்பதே தலையாயக் கடமையாக கொண்டு உபி அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.












Click it and Unblock the Notifications