உ.பி. யோகி அரசு அதிரடி! பிரபல தாதா அத்திக் அகமது மகன் ஆசாத் அகமது என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பிரபல தாதா அத்திக் அகமதுவின் மகன் ஆசாத் அகமது என்கவுண்ட்டரில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
உ.பி. மாநிலம் பிரக்யராஜ் பகுதியை சேர்ந்த அத்திக் அகமது, அம்மாநில போலீசாருக்கு சவால்விடும் பிரபல தாதா. ஒட்டுமொத்த குடும்பமும் நிழல் உலக சாம்ராஜ்யத்தில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. இந்தக் குடும்பத்தின் மீது மட்டும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அதுவும் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் என வழக்குகள் பட்டியல் நீண்டது.

நிழல் உலக சாம்ராஜ்யம் மூலம் அத்திக் அகமது குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ1,000 கோடி வருவாய் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி மட்டுமே ரூ11,000 கோடி சொத்துகள் அத்திக் குடும்பத்துக்கு இருக்கிறதாம். அத்திக் முன்னாள் எம்பி.
பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த ராஜூ பால் 2005-ல் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அத்திக் அகமது உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டனர். ராஜூ பால் கொலை வழக்கின் முக்கிய சாட்சி உமேஷ் பால் கடந்த பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் அத்திக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்ப்கில் அத்திக் மகன் ஆசாத் அகமதுவும் சேர்க்கப்பட்டிருந்தார். அவரது தலைக்கு ரூ5 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் உ.பி.யில் இருந்து ஆசாத் அகமது மத்திய பிரதேசத்துக்கு தப்பி ஓட திட்டமிட்டிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாம். ஏற்கனவே கான்பூர், டெல்லி, மீரட்டில் ஆசாத் அகமதுவை தேடி ஓய்ந்த உ.பி. போலீசார் இம்முறை ஆசாத்தை சுற்றிவளைக்க முடிவு செய்தது. மொத்தம் 12 பேர் கொண்ட போலீஸ் டீம் ஆசாத் அகமதுவை ஜான்சி அருகே சுற்றி வளைத்தது.
அப்போது ஆசாத் அகமது கும்பலுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் ஆசாத் அகமது, குலாம் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
உ.பி.யில் ஆளும் பாஜக அரசு ஏற்கனவே பல நூறு என்கவுண்ட்டர்களை செய்து வருவதாக பல்வேறு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நிழல் உலக தாதா மகன் ஆசாத் அகமது என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications