சமாஜ்வாதிக்கு முஸ்லிம்கள் ஓட்டு போட்டுட்டாங்க...தேர்தல் களத்தில் காணாமல் போன மாயாவதி குமுறுகிறாராம்!
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களித்ததால் பாஜகவால் வெல்ல முடிந்தது; பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களித்திருந்தால் பாஜகவால் வெற்றி பெற முடிந்திருக்காது என அக்கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலுக்கு முன்பும் சரி, தேர்தல் பிரசாரம் அனல் பறந்த போதும் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடுகிறதா? அதன் தலைவர் மாயாவதி எங்கே இருக்கிறார்? என அத்தனை ஊடகங்களும் வலைவீசி தேடின. 2022 சட்டசபை தேர்தல் ஏதோ ஒரு மாநிலத்தில் நடப்பது போல எதுவும் தெரியாதவர் போல பதுங்கி இருந்தார் மாயாவதி.

காணாமல் போன மாயாவதி
மாயாவதி மீதான வழக்குகளுக்கு அஞ்சியே அவர் தேர்தல் களத்துக்கே வரவில்லை என்றே ஊடகங்கள் எழுதின. நாங்களும் களத்தில் நிற்கிறோம் என்ற பெயரில் வேட்பாளர்களை நிறுத்தி பாஜக எதிர்ப்பு வாக்குகளை சூப்பராக பிரித்தார் மாயாவதி. பகுஜன் சமாஜ் கட்சியும் உ.பி.யில் ஆட்சியில் இருந்தது என்பதை மறந்து போய் பிரசாரத்துக்கே செல்லாமல் ஒதுங்கிக் கொண்டார் மாயாவதி.

பாஜக பக்கம் தலித்துகள்
மாயாவதியின் திடீர் மர்ம பதுங்கல் காரணமாக தலித்துகள் இம்முறை பாஜகவுக்கே வாக்களித்தனர். உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் வெற்றியில் தலித்துகளின் வாக்குகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதுதான் ஆய்வாளர்களின் கருத்து. தலித்துகள்-முஸ்லிம்கள்-ஓபிசி வாக்குகள் தங்களுக்கு வரும் என கணக்குப் போட்டது அகிலேஷின் சமாஜ்வாதி தலைமையிலான கூட்டணி. ஆனால் தலித்துகள் கணிசமான அளவில் பாஜகவுக்கு வாக்களித்தனர்.

ஒற்றை இடம்தான்
இதனால் உ.பி. தேர்தல் களத்தில் இருந்தே பகுஜன் சமாஜ் கட்சி காணாமலேயே போய்விட்டது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரே ஒரு இடம்தான் கிடைத்தது. ஆனாலும் சுமார் 13% வாக்குகளை பகுஜன் சமாஜ் கட்சி பெற்றது. இந்த 13% வாக்குகள் பிரிப்பு என்பது பாஜகவுக்குதான் சாதகமானது;இன்னொரு பக்கம் ஓவைசி சுமார் 22 லட்சம் வாக்குகளை தனித்தே அறுவடை செய்தார். இப்படி பகுஜன் சமாஜ் கட்சியும் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியும் சமாஜ்வாதி கட்சிக்கு போக வேண்டிய ஓட்டுகளை பிரித்து துவம்சம் செய்ததால் எளிதாகவே பாஜக வென்றது.

குமுறுகிறாராம்
இந்நிலையில் தேர்தல் களத்துக்கே வராத மாயாவதி இப்போது பேட்டி அளித்துள்ளார். அதில், முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக சமாஜ்வாதி கட்சிக்கு ஓட்டுப் போட்டுவிட்டார். பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஓட்டுப் போட்டிருந்தால் பாஜகவால் ஜெயித்திருக்கவே முடியாது. 2017 தேர்தலுக்கு முன்னர் பாஜக இம்மாநிலத்தில் எப்படி இருந்ததோ அப்படித்தான் இப்போது காங்கிரஸ் உள்ளது. ஆனால் தலித்துகள் எங்கள் பக்கம் பாறை போல நிற்கிறார்கள். இத்தகைய தேர்தல் தோல்விகளால் பகுஜன் சமாஜ் கட்சி துவண்டுவிடாது என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications