டிபன் மீட்டிங்.. சிறப்பு செமினார்.. உ.பியில் முஸ்லீம் வாக்குகளை கவர பாஜக களமிறக்கும் பெரிய திட்டம்!
லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்குகளை கவர்வதற்காக பாஜக பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. பல்வேறு கூட்டங்கள், செமினார்களை நடத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது.
2022 உத்தர பிரதேச சட்டசபை தேர்தலுக்காக பாஜக இப்போதே தீவிரமாக தயாராகி வருகிறது. அங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்தை முன்னிறுத்தி பாஜக இந்த முறை தேர்தலை சந்திக்கும் திட்டத்தில் உள்ளது. பெரிய மாநிலம் என்பதாலும், அதிக லோக்சபா இடங்களை கொண்ட மாநிலம் என்பதாலும் சட்டசபை தேர்தலில் எப்படியாவது வென்று உத்தர பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்கும் திட்டத்தில் உள்ளது. சட்டசபை தேர்தலில் வெல்வது லோக்சபா தேர்தலிலும் அக்கட்சிக்கு சாதகமாக இருக்கும்.
காங்கிரஸ் கட்சி அவ்வளவு வலுவாக இல்லாத நிலையில், சமாஜ் வாதி, பகுஜன் சமாஜ் இடையே கூட்டணிக்கான அறிகுறிகள் தெரியாத நிலையில், வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு இங்கு எப்படியாவது மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற திட்டத்தில் பாஜக உள்ளது.

சிக்கல்
ஆனால் பாஜகவிற்கு சிக்கலாக இருப்பது இஸ்லாமியர் வாக்குகள். ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் இஸ்லாமியர் வாக்குகளும், வலதுசாரிகளுக்கு எதிரான மைய வாக்குகளும் எதிராக திரும்பும் பட்சத்தில் அது பாஜகவின் வெற்றியை பாதிக்கும். அதிலும் சிஏஏ சட்டம், மாட்டிறைச்சி வன்முறை, இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள், பல்வேறு பெட்டி கேஸ்களுக்கான என்கவுண்டர் என்று பல்வேறு காரணங்களால் இஸ்லாமியர்கள் வாக்குகள் பாஜகவிற்கு எதிராக திரும்பும் வாய்ப்புகளும் உள்ளன.

இஸ்லாமியர் வாக்கு
உத்தர பிரதேசத்தில் 19 சதவிகித இஸ்லாமிய வாக்காளர்கள் இருக்கிறார்கள். இந்த வாக்குகள் தேர்தல் வெற்றிபெற ரொம்ப முக்கியம். கடந்த 2017 உ.பி சட்டசபை தேர்தலில் பாஜக கணிசமான இஸ்லாமியர் வாக்குகளை பெற்றதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த இஸ்லாமியர் வாக்குகள் இந்த முறை மீண்டும் அக்கட்சிக்கு கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. இதனால் 2017 சட்டசபை, 2019 லோக்சபா தேர்தல்களில் உத்தர பிரதேசத்தில் பெற்ற இஸ்லாமியர்களின் வாக்குகளை விட அதிக வாக்குகளை பெற அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

திட்டம் என்ன
இதற்காக அக்கட்சி பல்வேறு அதிகாரபூர்வமற்ற கூட்டங்களை நடத்தும் திட்டத்தில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜகவின் தேர்தல் திட்டங்கள் குறித்து தி பிரிண்ட் ஊடகத்திற்கு பாஜக சிறுபான்மையினரை பிரிவு தேசிய தலைவர் ஜமால் சித்திக் அளித்த பேட்டியில், பாஜக அரசின் திட்டங்களை இஸ்லாமியர்களிடம் கொண்டு செல்ல இருக்கிறோம். மோடியின் திட்டங்களை இஸ்லாமியர்களுக்கு தெரியப்படுத்துவோம்.

தொகுதி
தொகுதிகளில் வார்டு வாரியாக செயலாளர் தொடங்கி அமைச்சர்கள் வரை எல்லோரும் களமிறங்கி கூட்டங்களை நடத்துவோம். இஸ்லாமியர்களை நேரடியாக சந்தித்து பேசுவோம். அவர்களுக்காக கொண்டு வந்த திட்டங்கள் குறித்து பேசுவோம். காலை உணவு, மதிய உணவு போன்ற "'டிபன் விருந்து" ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இதற்கு இஸ்லாமியர்களை அழைத்து வந்து அவர்களிடம் அரசு பற்றிய பாசிட்டிவ் விஷயங்களை பேசுவோம். இந்த விருந்தில் பெரிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.

டார்கெட் என்ன?
எங்கள் அரசு இஸ்லாமியர்களுக்கு நிறைய செய்துள்ளது. முத்தலாக் ஒழிப்பு தொடங்கி, வீடு கட்டுதல், வேலைவாய்ப்பு என்று பல நலப்பணிகளை செய்துள்ளோம். இதை இஸ்லாமியர்களிடம் கொண்டு செல்வோம். ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 5 ஆயிரம் இஸ்லாமியர்களின் வாக்குகளை குறி வைக்க திட்டமிட்டு உள்ளோம். இதுதான் எங்கள் டார்கெட். ஒவ்வொரு தொகுதிக்கும் 100 பேரை களமிறக்கி அவர்கள் 5000 இஸ்லாமியர்கள் வாக்குகளை பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்.

ஏன்?
இவர்கள் 50 இஸ்லாமிய குடும்பங்களுக்காகவாது சென்று வாக்கு சேகரிப்பார்கள். 2017ல் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் 4000, 5000 வாக்கு வித்தியாசத்தில்தான் தோல்வி அடைந்தோம். உதாரணமாக சஹர்பூர் நகர் தொகுதியில் 4000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம். இது போன்ற தொகுதிகளில் கூடுதலாக 5000 இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற இலக்கு நிர்ணயம் செய்து இருக்கிறோம், என்று பேட்டியில் பாஜக சிறுபான்மையினரை பிரிவு தேசிய தலைவர் ஜமால் சித்திக் குறிப்பிட்டுள்ளார்.

மீட்டிங்குகள்
இதற்காக மீட்டிங்குகளை நடத்த வேண்டும் என்று கடந்த அக்டோபர் 24ல் நடந்த பாஜக செயற்குழு மீட்டிங்கிலேயே உத்தரவு சென்றுள்ளது. டிபன் பாக்ஸ் மீட்டிங் மட்டுமின்றி மற்ற சில செமினார்களையும் பாஜக நடத்த உள்ளது. அதன்படி 'Taleem aur Tijarat' என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கு பாஜக திட்டங்கள் குறித்த விவரங்களை வெளியிடுதல், அவர்களுக்கு பாஜக மீது நன்மதிப்பை ஏற்படுத்துதல் போன்ற பணிகளையும் செய்ய உள்ளனர்.

பலர்
உ.பியில் 403 சட்டசபை தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 100 பேர் என்று மொத்தம் 40300 பேர் வரை இதற்காக மட்டும் தனியாக தேர்தல் பணிக்கு களமிறக்கப்பட உள்ளனர். இவர்கள் இஸ்லாமியர்களின் வாக்குகளை மட்டும் குறி வைத்து பணிகளை மேற்கொள்வார்கள். உத்தர பிரதேசத்தில் மீண்டும் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பாஜக மிக தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள தொடங்கிவிட்டது... இதனால் அங்கு இப்போதே தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. Credit: The Print.












Click it and Unblock the Notifications