எனது ஆட்சியில் யாருக்கும் அநீதி இழைக்கப்படாது! உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி
லக்னோ: தனது ஆட்சிக்காலத்தில் யாருக்கும் அநீதி இழைக்கப்படாது என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை கோரக்நாத் கோயில் வளாகத்தில் மக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்ற அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். மேலும், "மக்களின் பிரச்சனைகளை மிகுந்த தீவிரம், உணர்வு மற்றும் கவனத்துடன் கேட்டு அவர்களுக்கு திருப்திகரமான தீர்வுகளை வழங்க வேண்டும். மருத்துவம், கல்வி போன்ற தேவைகளுக்காக வருபவர்களுக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காண வேண்டும். சில நேரங்களில் ஒரே கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் மீண்டும் மீண்டும் மனு அளிக்கின்றனர்.
அப்படியெனில் ஏன் அவர்களுடைய கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படவில்லை? என்கிற கேள்வி எழுகிறது. எனவே மக்களின் தேவையை உணர்ந்து உடனடியாக அதை அதிகாரிகள் பூர்த்தி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடி உதவிகளை வழங்குவதுடன், நில ஆக்கிரமிப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கடந்த 2017-18 முதல் 2021-22 வரையிலான காலகட்டத்தில் பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பொருளாதாரத்தின் அளவு அடிப்படையில் ஐந்தாவது பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம், வேகமான விகிதத்தில் (14.7 சதவீதம்) வளர்ந்துள்ளது. எதிர்வரும் 2027-28ம் ஆண்டிற்குள் மாநிலத்தை 1-டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-2023ம் ஆண்டிலேயே மாநிலத்தின் பொருளாதாரம் இரட்டை இலக்கை எட்டியது.
தொழில்துறை வளர்ச்சி, வேளாண்மையில் ஏற்பட்ட நேர்மறையான மாற்றம் போன்றவைதான் இதற்கு முக்கியமான காரணமாகும். கடந்த 2015-2016களில் 36 சதவிகிதமாக இருந்த வறுமை என்பது தற்போது 18 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. இப்படியான வளர்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கையில் மக்களின் பிரச்னைகளுக்கு நாம் சரியான தீர்வை காண வேண்டும். மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் இரண்டும் சம அளவில் வளர வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications