ஒரே போடு.. "மாஃபியா கேங் நீங்க.. வளர்ச்சி பாதையில் நாங்க".. யோகி சொன்னதுமே கடுப்பான சமாஜ்வாடி.. ஏன்?
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக உத்தரப் பிரதேசத்தை டார்கெட் செய்துள்ளது
லக்னோ: 'ஒரு மாவட்டம், ஒரு மாஃபியா' என்று இருந்த உத்தரப் பிரதேசத்தை 'ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு' என சிறுகுறு தொழில்களுக்கு ஏற்பவாறு மாற்றியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த பட்ஜெட்டில் அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் சுகாதாரம், உட்கட்டமைப்புகள் மற்றும் கல்வி போன்றவற்றிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டமன்றத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தன.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசிய யோகி ஆதித்யநாத், "சமாஜ்வாடி கட்சி ஒரு காலத்தில் உத்தரப் பிரதேசத்தை சீரழித்து இருந்தது. அவர்கள் ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாஃபியா என்கிற சூழலை உருவாக்கியிருந்தனர். ஆனால் பாஜக ஒரு மாவட்டத்திற்கு ஒரு தயாரிப்பு என திட்டத்தை உருவாக்கி சிறுகுறு தொழில்களின் முன்னேற்றத்திற்கு உதவி செய்கிறது. இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசத்தில்தான் அதிக சிறுகுறு தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன.
எனவே ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு திட்டம் இந்த தொழில்களுக்கு புத்துயிர் அளித்திருக்கிறது. இதுபோன்ற திட்டங்களால் மாநிலத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. 2016-17ம் ஆண்டை விட 2021-2022ம் ஆண்டு அதிகமான வேலைவாய்ப்புகளை இந்த டபுள் என்ஜின் அரசு உருவாக்கி கொடுத்திருக்கிறது. இந்த ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்த ஏற்றுமதி மதிப்பானது ரூ.1,56,000 கோடியாக இருக்கிறது. ஆனால் 2017ம் ஆண்டுக்கு முன் இம்மாநிலத்தில் மாஃபியாக்களை தவிர என்ன இருந்தது? ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாஃபியா ஆதிக்கம் செலுத்தி வந்தது.
சுரங்க மாஃபியாக்கள், வன மாஃபியாக்களை சமாஜ்வாடி கட்சி ஊக்குவித்திருந்தது. ஆனால் இன்று எதிர்க்கட்சியாக இருக்கும் இக்கட்சி மாநிலத்தின் வளர்ச்சியை கேலியாக பார்க்கிறது. நாங்கள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை 1 டிரில்லியன் டாலரை நோக்கி கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கிறோம். கடந்த 6 ஆண்டுகளில் இந்த பாஜக அரசு பல்வேறு சவால்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு வருகிறது. இன்று சட்டமன்றத்தில் எங்களை கேலி செய்யும் இதே சமாஜ்வாடி அரசுதான் கடந்த 2016-2017ம் ஆண்டு பட்டியல் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை நிறுத்தியது.
ஆனால் பாஜக அரசு இதனால் பாதிக்கப்பட்ட 21,21,629 மாணவர்களுக்கு மீண்டும் கல்வி உதவி தொகையை வழங்கியது. ஆகவே எதிர்க்கட்சியினருக்கு பேச எந்த பாயிண்டும் இல்லாத போது மக்களின் கவனத்தை திசை திருப்ப அவர்கள் இப்படி போலியான குற்றச்சாட்டுகளை எங்கள் மீது அடுக்குகின்றனர். ஆனால் இக்குற்றச்சாட்டுகளால் எங்களின் பயணத்தை இவர்களால் நிறுத்திவிட முடியாது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications