ஷாக்.. ஐசியூவில் ஷூவை கழற்ற கூறியதால் ஆக்ரோஷம்! மருத்துவமனையை இடிக்க புல்டோசரை வரவழைத்த பாஜக மேயர்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் ஐசியூவுக்குள் ஷூவை கழற்றிவிட்டு செல்லக்கூறியதால் மருத்துவமனையை இடிக்க புல்டோசருக்கு போன் போட்ட பாஜக மேயரால் பரபரப்பான சூழல் உருவானது.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இங்கு தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுவோரின் வீடுகள் புல்டோசர் மூலம் அவ்வப்போது இடிக்கப்பட்டு வருகிறது.

யோகி ஆதித்யாத்தின் உத்தர பிரதேச மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு, எதிர்ப்பும் எழுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் தான் லக்னோ மாநகராட்சி மேயர் ஒருவர் மருத்துவ பணியாளர்களிடம் தகராறு செய்து மருத்துவமனையை இடிக்க புல்டோசருக்கு போன் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது உத்தர பிரதேச மாநிலம் லக்னோ மாநகராட்சியின் மேயராக இருப்பவர் சுஷ்மா கார்க்வால். இவர் பாஜகவை சேர்ந்தவர். இவருக்கு தெரிந்த ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் தான் அவரை பார்த்து நலம் விசாரிக்க சுஷ்மா கார்க்வால் அங்கு சென்றார்.
அப்போது அந்த நபருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து சுஷ்மா கார்க்வால் தான் அணிந்திருந்த ஷூவுடன் ஐசியூ அறைக்குள் நுழைய முயன்றார். இதை பார்த்த மருத்துவமனை பணியாளர்கள் ‛‛ஐசியூவுக்குள் ஷூ அணிந்து செல்லக்கூடாது. ஷூவை கழற்றிவிட்டு செல்லுங்கள் மேடம்'' என தெரிவித்தனர்.

இதற்கு மேயர் சுஷ்மா கார்க்வால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு ஷூவை கழற்ற மறுப்பு தெரிவித்து பணியாளர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் புல்டோசர் மூலம் மருத்துவமனை இடித்து அகற்றப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார். இதுமட்டுமின்றி மருத்துவமனையை இடிக்க புல்டோசரை கொண்டு வரும்படி மாநகராட்சி அலுவலகத்துக்கு போன் செய்துள்ளார்.
இதனால் மருத்துவமனை பணியாளர்கள் பயந்து போயினர். உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து மேயர் சுஷ்மா கார்க்வாலை சமாதானம் செய்தனர். அதன்பிறகு பிரச்சனை முடிவுக்கு வந்தது. இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications