உ.பியில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்தியுள்ளோம்.. யாரும் மிரட்டி பணம் பறிக்க முடியாது.. யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மேம்படுத்தப்பட்டு இருப்பதாகவும், நடைபாதை வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் துணிச்சல் எந்த ரவுடிகளுக்கும் கிடையாது என்றும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தெருவோர வியாபாரிகளுக்கு பிரதமரின் சிவநிதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவியின் முதல் தவணையை வழங்கினார். முதல் தவணையாக ரூ.10 ஆயிரம் முதல் 11 ஆயிரம் வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை பயனாளிகளுக்கு வழங்கிய உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பின்னர் நிகழ்ச்சியில் பேசியதாவது:-

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மேம்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து அவர் கூறுகையில், "குண்டர்கள் மற்றும் கிரிமினல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தெருவோர வியாபாரிகளிடம் இருந்து மிரட்டி பணம் வசூலிக்கும் துணிச்சல் தற்போது யாருக்கும் கிடையாது" என்றார். பிரதமரின் சிவநிதி திட்டம் என்பது தெருவோர வியாபாரிகளுக்கு மைக்ரோ கிரெடிட் வழங்கும் திட்டம் ஆகும்.
இந்த திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். உத்தர பிரதேசத்தில் மட்டும் இந்த திட்டத்தின் கீழ் 15 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக யோகி ஆதித்யநாத் கூறுகையில், 'இந்த திட்டம் பெண்களுக்கு மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல் என்பதாகும். அவர்களை தற்சார்பு உடையவர்களாக மாற்றும். பெண்கள் வீட்டு வேலைகளை முடித்த பிறகே சாலையோரங்களில் கடைகளை போடுகிறார்கள்.
சிவநிதி திட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்பாக தெருவோர வியாபாரிகள், கடன் கொடுப்பவர்களிடம் இருந்து பணம் வாங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டார்கள். இதை பயன்படுத்தி அவர்களும் அதிக தொகை வசூலித்தனர். தற்போது சிவநிதி திட்டத்தின் மூலம் அந்த நிலை மாறியிருக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications