சமோசாவால் பிரிந்த குடும்பம்.. கணவன் - மாமனாருக்கு இளம்பெண் கொடுத்த தண்டனை.. போலீஸ் வழக்கு
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஆசையாக கேட்ட சமோசாவை வாங்கி வர மறந்த கணவனை பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கடுமையாக தாக்கினார். அப்போது தடுக்க முயன்ற அவரது மாமனாரையும் கீழே தள்ளி அந்த பெண் எட்டி உதைத்தார். இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் சம்பவம் போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது. இதனால் தற்போது சமோசாவால் அந்த குடும்பம் பிரிந்து நிற்கிறது.
உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் அருகே புரான்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் சிவம் குமார். திருமணம் ஆனவர். இவரது மனைவி பெயர் சங்கீதா. சங்கீதாவுக்கு சமோசா என்ற கொள்ளை பிரியம். டீக்கடை, ஹோட்டல் என்று எங்கு சென்றாலும் அவர் சமோசா வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் தான் கடந்த மாதம் 30ம் தேதி சிவம் குமார் வீட்டை விட்டு வெளியே சென்றார். அப்போது மனைவி சங்கீதா ஒரு கோரிக்கை வைத்தார். வீட்டுக்கு மீண்டும் திரும்பி வரும்போது சமோசா வாங்கி வாருங்கள் என்று கூறினார். சிவம் குமாரும், சங்கீதாவிடம் சமோசா வாங்கி வருவதாக கூறினார்.
ஆனால் சிவம் குமார் வீடு திரும்பும்போது சமோசா வாங்கி வரவில்லை. அவர் வெறும் கையோடு வீட்டுக்கு வந்தார். இதனால் சங்கீதா பெரும் ஏமாற்றம் அடைந்தார். கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் உருவாகி சண்டை ஏற்பட்டது. அதன்பிறகு இருவரும் பேசாமல் படுத்து தூங்கினர். மறுநாள் காலையில் கண்விழித்தபோதும் சங்கீதாவுக்கு கோபம் தணியவில்லை.
சங்கீதா உடனடியாக தனது பெற்றோருக்கு போன் செய்து வரவழைத்தார். சங்கீதாவின் தாய் உஷா மற்றும் தந்தை ராம்லடேட், தாய்மாமா ராமோதர் ஆகியோர் வீட்டுக்கு வந்தனர். சங்கீதா நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து அவர்கள் கோபமாகி சங்கீதாவின் கணவர் சிவம் குமாரை ஆபாசமாக திட்டினர். மேலும் அவரை தாக்கினர். மகன் சிவம் குமார் மீதான தாக்குதலை தடுக்க அவரது தந்தை விஜய் குமார் சென்றார். அப்போது அவரையும் தாக்கினர்.
கணவர் சிவம் குமார், மாமனார் விஜய் குமார் ஆகியோரை கீழே தள்ளிய சங்கீதா இருவரையும் காலால் எட்டி உதைத்தார். இதுதொடர்பாக சிவம்குமார் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து மனைவி சங்கீதா அவரது தந்தை ராம்லடேட், தாய் உஷா, தாய்மாமா ராமோதர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி பிலிபிட் எஸ்எஸ்பி அபிசேக் யாதவ் கூறுகையில், ‛‛இந்த தாக்குதலில் சிவம் குமார் காயமடைந்துள்ளார். அவரது கண்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறோம்'' என்றார். அதுமட்டுமின்றி சிவம் குமார் மற்றும் அவரது தந்தை விஜய் குமார் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த விவகாரத்தால் தற்போது கணவன் - மனைவி குடும்பம் பிரிந்து தனித்தனியே நிற்கிறது.












Click it and Unblock the Notifications