கலவரமா? அதுவும் உத்தரப்பிரதேசத்திலா.. நோ சான்ஸ்.. அடித்து சொல்லும் முதல்வர் யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவங்கள் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வியை எழுப்பியுள்ள நிலையில், மாநிலத்தில் மாஃபியாக்கள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் போலீஸ் கஸ்டடியில் இருந்த இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் எம்எல்ஏவும், மாநிலத்தின் மிகப்பெரிய தாதாக்களின் ஒருவருமான அத்திக் அகமதுவும் அவரது சகோதரர் அர்ஷப் அகமதுவும் வழக்கறிஞர் உமேஷ்பால் கொலை வழக்கில் சிறையில் இருந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள போலீசார் பிரக்ராஜ் பகுதியில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அப்போது பத்திரிகையாளர்கள் அவர்கள் இருவரையும் சூழந்தனர். திடீரென எதிர்பாராத நேரத்தில் அத்திக் அகமதுவின் நெற்றியில் குண்டு பாய்ந்தது. அவர் சரிந்து கீழே விழ பத்திரிகையாளர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடினர். அவருடன் கைவிலங்கு போடப்பட்டிருந்த அர்ஷப் அகமதுவும் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார். சுமார் 36 ரவுண்டுகள் இவர்கள் இருவர் மீதும் சுடப்பட்டுள்ளன. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது அம்மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தையடுத்து அத்திக்கின் ஆதரவாளர்கள் கலவரம் செய்யாமல் இருக்க உடனடியாக மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களுக்கும் 144 தடை உத்தரவு போடப்பட்டது.
அதேபோல இந்த கொலை வழக்கு குறித்து விசாரணை மேற்கொள்ள மூன்று பேர் கொண்ட குழுவையும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைத்துள்ளார். பொதுவெளியில் அதுவும் காவல்துறையினர் பாதுகாப்புடன் இருக்கும் கைதியை மர்ம நபர்கள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளது அம்மாநில சட்டம் ஒழுங்கு குறித்த கேள்வியை எழுப்பியது. எதிர்க்கட்சிகள் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி குறித்து வலுவான கண்டனங்களை முழங்கியுள்ளனர். ஏற்கனவே யோகி மீது என்கவுன்ட்டர் குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், இந்த சம்பவமும் பெரும் குற்றச்சாட்டாக உருவெடுத்துள்ளது. இதனையடுத்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது, "உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இருந்த நிலைமையை மக்கள் நினைத்து பார்க்க வேண்டும். கடந்த 2012ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை சமாஜ்வாடி கட்சி ஆட்சி செய்த காலத்தில் மாநிலம் முழுவதும் 700க்கும் அதிகமான கலவரங்கள் நடந்துள்ளன. அதேபோல பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி செய்த 2007 முதல் 2012ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் 364 கலவரங்கள் நடந்துள்ளன. ஆனால் 2017ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான 6 ஆண்டுகால ஆட்சியில் ஒரேயொரு இடத்தில் கூட வன்முறைகள் நடைபெறவில்லை. இதுதான் பாஜக ஆட்சி. பாஜக அமைதியைதான் விரும்புகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications