வளர்ச்சியை சாத்தியப்படுத்தியது பாஜக அரசுதான்! நலத்திட்டங்களை பட்டியலிட்டு யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: காங்கிரஸ் மோதல்களையும், பிரச்னைகளையும் மட்டுமே உருவாக்குவதாகவும், பாஜக வளர்ச்சியை உருவாக்கியுள்ளதாகவும் யோகி ஆதித்யநாத் பெருமிதம் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் நாளை சட்டப் பேரவை தேர்தல் தொடங்குகிறது. இந்நிலையில் நேற்று அம்மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக செய்த சாதனைகளை பட்டியலிட்டார். மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக எனும் இரட்டை என்ஜின் அரசு இருப்பதால்தான் ஏராளமான திட்டங்கள் வெற்றிகரமாக அமல்படுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் உத்தரப் பிரதேசத்தில் பாஜக அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டார். வீடு, மின்சாரம், ஏழைகளுக்கு சுகாதார பாதுகாப்பு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் உஜாவாலா யோஜனா, இலவச கழிப்பறை என உத்தரப் பிரதேசத்திற்கு பாஜக ஏராளமான திட்டங்களை செய்துள்ளதாகவும், கடந்த காலத்தில் காங்கிரஸ் எதையுமே செய்யவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் மோதல்களையும், பிரச்னைகளையும் மட்டுமே உருவாக்குவதாகவும், பாஜக வளர்ச்சியை உருவாக்கியுள்ளதாகவும் பெருமிதமாக கூறிய யோகி ஆதித்யநாத், பாஜக அரசாங்கத்தின் கீழ் விமானப் போக்குவரத்து முதல் மருத்துவக் கல்லூரிகள் வரையில் மேம்படுத்தப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகளையும் சுட்டிக்காட்டினார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் எதிர்த்தது என்று குற்றம்சாட்டிய யோகி, பாஜக மட்டுமே ஏழைகளுக்காக உண்மையாக உழைப்பதாக கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியினர் காலத்தில் ரவுடிகளும், குண்டர்களும் அதிக அளவில் இருந்தனர். அவர்கள் அரசு இயந்திரத்தை சரியாக இயக்கவிடாமல் பாதிப்பை ஏற்படுத்தி வந்தனர். ஆனால் பாஜக அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதோடு, அரசை சீரான முறையில் இயக்கி வருகிறது என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
