'பாசிடிவ் சேஞ்ச்' பொருளாதாரத்திலா?.. அடுத்த லெவலுக்கு உயரும் உத்தரபிரதேசம்.. காரணமே இந்த திட்டம்தான்
லக்னோ: உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்த 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' திட்டம் லோக்கல் பொருட்களை சர்வதேச சந்தைக்கு எடுத்து செல்லும் என்று கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் பாஜகவினர் தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மூன்றாவது முறையும் நாடாளுமன்ற தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற உத்தரப் பிரதேசத்தின் வாக்கு வங்கி மிக மிக அவசியமானதாகும். ஏனெனில் இம்மாநிலத்தில் மட்டும் 80 மக்களவை சீட் இருக்கிறது. இதனை ஜெயிப்பது ஒட்டுமொத்த வெற்றிக்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கும். அது மட்டுமல்லாது தற்போது உபியில் பாஜக ஆட்சிதான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

எனவே உலக முதலீட்டாளர்கள் மாநாடு, பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை பாஜக மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவியேற்று 6 ஆண்டுகள் நிறைவு செய்ததையும் கொண்டாடி வருகிறது. இதற்கு முன்னர் இருந்த முதலமைச்சர்கள் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் இந்த பதவியில் நீடித்தது கிடையாது. எனவே யோகி ஆதித்யநாத்தின் சாதனையை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக யோகி ஆதித்யநாத் பல்வேறு திட்டங்களை தொடக்கி வைத்துள்ளார். அப்படி தொடங்கப்பட்ட ஒரு திட்டம்தான் 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' (ODOP) திட்டம். நேற்று (மார்ச் 31) முதலமைச்சர் அலுவலகத்தில் விஸ்வகர்மா ஷ்ரம் சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்த பின்னர் சிறப்புரையாற்றிய யோகி ஆதித்யநாத் இந்த 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' (ODOP) திட்டம் குறித்து பாராட்டினார். தொடர்ந்து பேசிய அவர், "மாவட்டங்களில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலக சந்தையில் விற்கவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்படியொரு திட்டத்தை இதற்கு முன்னர் யாரும் கொண்டு வந்ததில்லை.
இந்த திட்டம் மூலம் உள்ளூர் உற்பத்தியாளர்கள் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறுவார்கள். சரியாக சொல்வதெனில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களின் முதுகெலும்பாக இந்த ODOP திட்டம் மாறியிருக்கிறது. இந்த சாதனைகள் காரணமாகதான் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.35 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் உத்தரப் பிரதேசத்திற்கு வந்து சேர்ந்தன. இதுதான் இம்மாநிலத்தின் 4வது தொழிற் புரட்சிக்கு அடித்தளமிடப்போகிறது. ஏற்கெனவே மாநிலத்தில் MSME நிறுவனங்கள் பெருகியுள்ளன. தற்போது இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.
அதாவது, நமது மாநிலத்தில் டிசைனிங் மற்றும் பேக்கேஜிங் நிறுவனங்களை திறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. கடந்த 2017ம் ஆண்டுக்கு முன் ரூ.86 ஆயிரம் கோடியாக இருந்த ஏற்றுமதியானது தற்போது ரூ.2.5 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. விஸ்வகர்மா ஷ்ரம் சம்மான் யோஜனா திட்டத்துடன் வங்கிகளை இணைக்க வேண்டிய அவசியம் வந்திருக்கிறது. இதன் மூலம் கைவினைஞர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த நிதி உதவியை எளிதில் பெற முடியும்" என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications