அரசின் நலத்திட்டங்கள் அனைவருக்குமானது! உ.பியில் யாரும் புறக்கணிக்கப்படுவதில்லை! முதல்வர் யோகி பேச்சு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு முந்தைய அரசுகள் நலத்திட்டங்களை வழங்குவதில் பாரபட்சமுடன் நடந்துகொண்டன என்றும், இதில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டனர் எனவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் உ.பியின் முந்தைய அரசாங்கங்கள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

உ.பியின் கோரக்பூரில் நேற்று தலித் மற்றும் பழங்குடியின சமூக மக்களுக்கான மண்டல மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற யோகி ஆதித்யநாத், பாஜகவுக்கு முந்தைய அரசுகள் நலத்திட்டங்களை வழங்குவதில் பாரபட்சமுடன் நடந்துக்கொண்டன என்றும், இதில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டனர் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "உத்தரப் பிரதேசத்தில் நவம்பர் 15-ம் தேதி பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. கடந்த கால அரசுகளை போல பாஜக நலத்திட்டங்களை பாகுபாடுகள் பார்த்து செயல்படுத்தவில்லை. பாஜக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நலத்திட்டங்கள் உரிய முறையில் சென்று சேர்கிறது. இன்று ரூ.271 கோடி மதிப்பில் 140 வளர்ச்சி திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அனைத்து திட்டங்களும் அனைத்து மக்களுக்கானதாகும்.
உ.பி அரசு இந்த அளவுக்கு சிறப்பாக இயங்க பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம். அவருடைய தலைமையில் ஒட்டுமொத்த நாடே சிறப்பான வளர்ச்சியை பெற்று வருகிறது. எனவே ஒவ்வொரு இந்தியனும் பிரதமருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications