மதுரை யானைமலையை கபளீகரம் செய்ய முயன்ற கும்பல்! 12 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது தெரியுமா?
மதுரை: மதுரை என்றாலே நினைவுக்கு வரும் இடங்களில் யானை மலையும் ஒன்று என்ற நிலையில், அந்த மலையை கபளீகரம் செய்ய 12 ஆண்டுகளுக்கு முன் நடந்த முயற்சி பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்நிலையில் யானைமலையை சிற்ப நகரமாக மாற்ற மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையும், வைகோ களமிறங்கி போராடியதையும் துரை வைகோ நினைவுகூர்ந்து பேசியிருக்கிறார். அதன் விவரம் வருமாறு;

''மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் இயற்கை எழில் வாய்ந்த இந்த யானை மலை தான். சமணர்களின் புனித தலமான இந்த யானைமலையில் சைவ வைணவ கோவில்களும் உண்டு. இந்த மலையை பார்த்தால் யானை படுத்திருப்பதைப் போன்ற தோற்றம் இருப்பதால் தான் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே, அன்றைய தமிழர்கள் இந்த மலைக்கு யானை மலை என்ற பெயரை சூட்டினார்கள். ஒரே கல்லில் ஆன மலையை Monolith Rock Mountain என ஆங்கிலத்தில் சொல்வார்கள்.''
''இயற்கையின் வியக்கத்தகு படைப்புகளில் ஒன்றான Monolith Rock Mountain -ஐ உலகில் சில இடங்களில் தான் காண முடியும். அதில் ஒன்று தான் இந்த யானை மலை. இப்படி பல அரிய சிறப்புகளை கொண்ட இந்த மலையில் உள்ள கிரானைட் வளங்களை கொள்ளையடிக்க சில பேராசை மனிதர்களின் தவறான வழிகாட்டுதலில் 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலையை சிற்ப நகரமாக அறிவித்து அரசாணையை வெளியிட்டது அன்றைய தமிழக அரசு.''

''இந்த மலையை உடைத்து கபளீகரம் செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் யானை மலையை சுற்றியுள்ள கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்தத் தகவலை அறிந்து இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் இங்கே வருகை தந்து பொதுமக்களுடன் போராட்டத்தில் பங்கெடுத்தார். யானை மலையை மீட்டுத் தருவேன் என அந்தப் போராட்டத்தில் தலைவர் வைகோ அவர்கள் உறுதி அளித்ததோடு யானை மலையை மீட்கும் போராட்டத்தையும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அறிவித்தார். ''
''அடுத்த பத்து நாட்களில் யானை மலையை சிற்ப நகரமாக அறிவிக்கும் முயற்சியை அரசாங்கம் கைவிட்டு அரசாணையை திரும்பப் பெற்றுக் கொண்டது. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை காக்கும் எல்லைச் சாமியாக விளங்கும் நம் தலைவர் வைகோ அவர்கள், இந்த யானை மலையையும் பாதுகாத்து காப்பாற்றினார்.அன்று யானை மலையை பாதுகாக்க மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கப்பட்ட மாரத்தான் போட்டிதான் தொடர்ந்து இன்று 14 ஆவது ஆண்டாக, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.''












Click it and Unblock the Notifications