சிக்கிய 4 பேர்! ஆர்பி உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினரை தாக்கிய அமமுக ஒ.செ & ஓபிஎஸ் அணியினர் கைது
மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமமுக ஒன்றிய செயலாளர் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம், மங்கல்ரேவு பகுதியில் நேற்று இரவு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது கட்சிக்காரர்களுடன் வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது சிலர் வழிமறித்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் அதிமுக மாவட்ட நிர்வாகி தினேஷ்குமார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தினேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் சேடப்பட்டி காவல் நிலையத்தில், தாக்குதலில் ஈடுபட்ட அமமுக நிர்வாகி பழனிசாமி உள்பட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது, இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட அமமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த்திடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று புகார் மனு அளித்தார்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் குரல் கொடுத்தார். அதிமுகவுக்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள தொடர் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முன்னாள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் இ. மகேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள், சேடப்பட்டி ஒன்றியத்தில் கழக செயல் வீரர்கள் கூட்டத்தை முடித்துக் கொண்டு பேரையூர் செல்லும் போது, மங்கல்ரேவு அத்திப்பட்டு விலக்கு அருகே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், திமுக-வினரின் தூண்டுதலின் பேரில் சில சமூக விரோதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த கொலை வெறி தாக்குதலுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வன்முறை நிகழ்வில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என வேண்டுகோள் விடுத்தார்.
ஆர்பி உதயகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளை தாக்கிய நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் அமமுக சேடபட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி, அமமுக உறுப்பினர் பழனிசாமி, ஒபிஎஸ் அணியை சேர்ந்த அண்ணா தொழிற்சங்க பொதுக்குழு உறுப்பினர் குபேந்திரன், அஜய் உள்ளிட்ட 4 பேரை சேடப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications