பள்ளத்தில் பாய்ந்த ஸ்கூல் வேன் .. 8 வயது சிறுவனுக்கு கை போச்சு.. மதுரை அருகே சோகம்
8 வயது சிறுவனின் கை விபத்தில் துண்டித்துவிட்டது
மதுரை: 8 வயது சிறுவன் பயணம் மேற்கொண்ட அவனுடைய பள்ளி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து, இப்போது அந்தப் பையனின் கை பரிதாபமாக துண்டிக்கப்பட்டுள்ளது. மதுரை அருகேதான் இந்த சோகம்.
சென்னை அருகே தாம்பரத்தில் பள்ளிப் பேருந்தின் ஓட்டை வழியாக விழுந்து அநியாயமாக பறிபோன சுருதியை இன்னும் நம்முடைய நெஞ்சங்கள் மறக்கவில்லை. அந்த ஈரம் கூட இன்னும் மனசை விட்டு போகவில்லை. ஆனால் தொடர்ந்து பள்ளிப் பிள்ளைகள் ஏதாவது ஒரு வகையில் விபத்தில் சிக்குவது தொடர் கதையாகவே உள்ளது.

இந்த நிலையில் மதுரை அருகே மேலூர் என்ற இடத்தில் ஒரு விபத்து நடந்துள்ளது. அதில் சிக்கிய 8 வயது மாணவன் தனது கையை இழந்துள்ளான். வேனின் டிரைவர் உள்பட 18 பேர் காயமடைந்துள்ளனர்.
சிவகங்கையில் அழகுமலர் மெட்ரிகுலேஷன் என்ற பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பிள்ளைகளும் படிக்கிறார்கள். இவர்களை அழைத்து வருவதற்கு வேன் வசதி செய்து தரப்பட்டுள்ளது. அப்படித்தான், மேலூர் அருகே உள்ள சுன்னாம்பூர் என்ற கிராமத்திற்கும் இந்த பள்ளிக்கூட வேன் வருகிறது.
நேற்று காலை பூஞ்சுத்தி , சுன்னாம்பூர் ஆகிய கிராமங்களுக்கு வந்து பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு வேன் சிவகங்கை கிளம்பியுள்ளது. அப்போது திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்தது. பிரேக் பிடிக்கவில்லை போல. நிலை தடுமாறிய வேன் சாலையோரமாக இருந்த புதர்ப் பகுதியில் போய் பாய்ந்து விழுந்து விட்டது.
இதில் சிக்கி பள்ளிப் பிள்ளைகள், டிரைவர் ஆகியோர் காயமடைந்தனர். மொத்தமாக 18 பேர் காயமடைந்தனர். அதில் 3வது வகுப்பு படித்து வரும் ஒரு பையன் படுகாயமடையவே அவனை மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு (அரசு மருத்துவமனை) கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், இடது கை மோசமாக பாதிக்கப்பட்டிருக்கவே அவசரமாக அதை வெட்டி அப்புறப்படுத்தி விட்டனர். அவனுடைய நிலைமை கவலைக்கிடமாகவும் உள்ளதாம். தீவிரக் கண்காணிப்பில் அந்த சிறுவன் வைக்கப்பட்டுள்ளான்.
சம்பந்தப்பட்ட வேன் டிரைவர் மீது ஏகப்பட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இன்னும் அவரைக் கைது செய்யவில்லை.












Click it and Unblock the Notifications