அதிமுக மாநாட்டுக்கு வாங்கம்மா.. திமுக கவுன்சிலருக்கு அழைப்பு விடுத்த செல்லூர் ராஜூ! நிர்வாகிகள் ஷாக்
மதுரை: மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநாட்டுக்கு, திமுக கவுன்சிலருக்கு பத்திரிக்கை வைத்து அழைப்பு விடுத்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. இது அப்பகுதி திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி அ.தி.மு.கவின் பொன்விழா மாநாடு பிரமாண்டமாக நடைபெறுகிறது. அதிமுக மாநாட்டுக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு, தனது செல்வாக்கைக் காட்டும் வகையில் மதுரையில் பிரமாண்டமாக மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்.

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டிற்காக மதுரை வளையங்குளம் பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மாநாட்டு மேடை மற்றும் பந்தல் என பிரமாண்ட முறையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மாநாட்டுக்கு வரும் அதிமுக தொண்டர்களுக்கு உணவு தயாரிக்க 10,000 சமையல் கலைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இசையமைப்பாளர் தேவா கச்சேரி, மதுரை முத்து நகைச்சுவை நிகழ்ச்சி, ராஜலெட்சுமி - கணேஷ் ஆகியோரின் பாடல் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டு அழைப்பிதழை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அ.தி.மு.கவினருடன் இணைந்து மீனாட்சியம்மன் கோவிலில் வைத்து வழிபாடு நடத்தினார். இதனைத் தொடர்ந்து இஸ்லாமியர்களின் புனித தளமான கோரிப்பாளையம் தர்கா, கிறிஸ்தவர்களின் புனித தளமான சென் மேரீஸ் தேவாலயம் ஆகிய வழிபாட்டு தளங்களிலும் அழைப்பிதழை வைத்து வழிபாடு நடத்தினார்.

தொடர்ந்து, மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக மாநாடு அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விநியோகித்து வருகிறார். அந்தவகையில், ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் அழைப்பிதழ் கொடுத்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த மதுரை மாநகராட்சி கவுன்சிலர் லத்திகாஸ்ரீ, மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூவை பார்த்ததும், மரியாதை நிமித்தமாக சால்வை அணிவித்தார்.
இதைத்தொடர்ந்து, அவரிடமும், அதிமுக மாநாட்டுக்கான அழைப்பிதழை வெற்றிலை பாக்கு, குங்குமத்துடன் வழங்கி, மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டுக்கு கண்டிப்பாக வாருங்கள் என அழைப்பு விடுத்தார் செல்லூர் ராஜூ. திமுக நிர்வாகிக்கு, அதிமுக மாநாட்டுக்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது அப்பகுதி திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications