அடேங்கப்பா..! 2 லட்சம் கிலோ அரிசி.. மலை போல் காய்கறிகள்.. அதிமுக மாநாடுக்காக பிரம்மாண்ட ஏற்பாடு
மதுரை: அதிமுகவின் மாநில மாநாடு நாளை மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க வரும் அதிமுக தொண்டர்களுக்கு சுடச்சுட உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருப்பதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக தனது பலத்தை காட்டும் வகையில் நாளை பிரம்மாண்ட மாநாடு நடத்துகிறது. மதுரை வலையங்குளம் ரிங்ரோட்டில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த மாநில மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.

தமிழகம் முழுவதிலும் இருந்து அதிமுக கட்சியினர் மதுரை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர். சென்னையில் இருந்து சிறப்பு ரயில் மூலம் அதிமுகவினர் மதுரை சென்றனர். அதுபோக கார், வேன் மூலமாக மதுரை நோக்கி வாகனங்களில் அதிமுகவினர் சென்று கொண்டிருப்பதை இன்று மதியம் முதலே பார்க்க முடிகிறது. அதிமுக கொடி கட்டிய வேனும் கட்சியினர் சென்று கொண்டு இருக்கிறார்கள்.
மாநாடு அரங்கத்தின் நுழைவு வாயிலில் கோட்டை போல் வரவேற்பு அரங்கம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதில், அதிமுகவின் மறைந்த பொதுச்செயலாளர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவ அமைப்பும், எடப்பாடி பழனி சாமி படமும் வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்த 300 ஏக்கர் பரப்பளவில் இடம் தயார் செய்யப்பட்டுஅதிமுகவினர் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
மாநாட்டுக்கான பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் இரவு பகலாக மேற்கொண்டு வருகிறார்கள். மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு சுடச்சுட உணவு வழங்க பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மலைபோல காய்கறிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அதிமுக மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படு கிறது.
நெல்லை கேட்டரிங் என்ற நிறுவனம் வசம் உணவு சமைக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நேற்றிலிருந்து அந்த கேட்டரிங் டீம் சமைக்க ஆரம்பித்துவிட்டது. தொண்டர்கள் உணவு சாப்பிடுவதற்கு வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் பார்த்து செய்யப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் கூறுகிறார்கள். இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறுகையில், "அதிமுக மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் அனைவருக்கும் காலையில் இருந்து மாலை வரை சுடச்சுட உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல தடைகளை தாண்டி இந்த மாநாடு நடைபெறுகிறது. உலகத்தின் எட்டாவது அதிசயமாக இந்த மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டு பந்தலை சுற்றி சமையல் பணிநடக்கிறது. குடோனில் 2 லட்சம் கிலோ அரிசி தயாராக உள்ளது. எவ்வளவு பேர் வந்தாலும் அதை செய்வதற்கு பத்தாயிரம் பேருக்கு மேல் உள்ளனர். அதற்கான பாத்திரங்கள், குடிநீர் வசதி என அனைத்து ஏற்பாடுகளும் செய்யபட்டுள்ளது. 30 லட்சம் பேர் வந்தாலும் அவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
மாநாட்டில் பங்கேற்க வரும் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பாக 50 பவுன்சர்களை கட்சி தலைமை ஏற்பாடு செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமி வருகை தந்து மாநாட்டு திடலில் அதிமுக கொடி ஏற்றுகிறார். அப்போது ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவ அதிமுக நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளார்கள். இதற்காக மதுரை மாநாடு நடைபெறும் இடத்திற்கு அருகே ஒரு கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications