விஜய் தம்பி நல்ல மனசு உள்ளவர்.. இப்படித்தான் கமலும் கட்சி ஆரம்பிச்சார்.. செல்லூர் ராஜூ ரியாக்ஷன்!
மதுரை: தம்பி விஜய் நல்ல மனம் கொண்டவர். கட்சி ஆரம்பித்துள்ளார். எம்ஜிஆர் ஒன்றும் ரசிகர்களால் மட்டும் முதல்வர் ஆனவர் அல்ல என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
விஜய், தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தை தொடங்குவதாக நேற்று அறிவித்தார். விஜய்யின் தமிழக வெற்றி கழகம், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. கட்சி தொடக்கம் பற்றி விஜய் வெளியிட்ட அந்த அறிக்கையில், "தற்போதைய அரசியல் சூழலில் ஒரு பக்கம், 'ஊழல் கறை படிந்த அரசியல் கலாச்சாரம்' மற்றும் நிர்வாக முறைகேடு உள்ளது, மறுபுறம், ஜாதி மற்றும் மத வேறுபாடுகளால் நம் மக்களை துண்டாட துடிக்கும் 'பிளவு அரசியல் கலாச்சாரம்' உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், 2024 மக்களவைத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடப் போவதில்லை என்று கூறியுள்ள விஜய், இந்த லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலே நமது இலக்கு எனத் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், விஜய்யின் அரசியல் பிரவேசம், அரசியல் அரங்கில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
இந்நிலையில், விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து அரசியல் பிரமுகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் என பலரும், விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு. அப்போது அவரிடம், விஜய்யின் அரசியல் கட்சியின் எதிர்காலம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லோரும் இப்படித்தான் சொல்வார்கள். பாக்கியராஜ் கூட நான் தான் எம்ஜிஆரின் வாரிசு என்றார். ஒன்றும் இல்லாமல் போனார்.
கமல்ஹாசன் மதுரையில் தான் கட்சி தொடங்கினார். ஊழலை ஒழிப்பேன் என்றார். மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சொன்னார். இப்போது ஒரு தொகுதிக்காக தனது வாயை வாடகைக்கு விட்டுவிட்டார். விக்ரம் படத்தில் இருந்து திமுகவுடன் ஒரு ஒப்பந்தம் போட்டுவிட்டார். அவருக்கு என்ன கொள்கை இருக்கிறது?
தம்பி விஜய் தற்போது கட்சி ஆரம்பித்துள்ளார். தம்பி விஜய் நல்ல மனம் கொண்டவர். தமிழர், இளைஞர். அவரது கொள்கைகள் என்ன என்று சொல்ல வேண்டும். கட்சியை நடத்த வேண்டும். மக்கள் ஆதரவு கிடைக்க வேண்டும். எம்ஜிஆருக்கு, எம்ஜிஆர் மன்றம் மட்டும் காரணம் அல்ல, மக்கள் அனைவரும் எம்ஜிஆரை விரும்பினார்கள்.
அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியது வேறு. விஜய் கட்சி ஆரம்பித்துள்ளது வேறு. தம்பி விஜய் கட்சியின் எதிர்காலம் பற்றி மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும். மக்கள் தான் நீதிமான்கள். விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை மக்கள் முடிவு செய்வார்கள்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications