யார் துரோகி.. கொதித்த அதிமுக.. டார்கெட் செய்யப்படும் துரைமுருகன்.. எடுத்த புது அஸ்திரம்
மதுரை: எம்.ஜி.ஆரை துரோகி என விமர்சித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு எதிராக அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு புறம் எனில், ஊரக உள்ளாட்டசி தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இதை வைத்து துரைமுருகனுக்கு எதிராகவும், திமுகவிற்கு எதிராகவும் வேலூர் பகுதியில் பிரச்சாரங்களை அதிமுக செய்தது.
Recommended Video
கடந்த மாதம் 28ம் தேதி அன்று திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், எத்தனை காலத்துக்குத் துரோகிகளையே பார்த்துக்கொண்டிருப்பது. அண்ணா காலத்தில் சம்பத்தைப் பார்த்தோம். அதன் பிறகு எம்.ஜி.ஆரைப் பார்த்தோம். அப்புறம் கோபால்சாமியைப் பார்த்தோம். இனிமேல் அப்படி பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்" என்று பேசினார்.
இந்நிலையில் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரை நம்பிக்கை துரோகி என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அதிமுகவின் மூத்ததலைவர்கள், கூட்டணி கட்சியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். துரைமுருகனுக்கு நாவடக்கம் வேண்டும் என ஈபிஎஸ், ஒபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தனர்.

கருணாநிதி முதல்வரானது எப்படி
துரைமுருகனின் இந்த பேச்சை கண்டிக்கும் வகையில் அதிமுக சார்பில் மதுரை மாநகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டியில் "துப்பாக்கி குண்டை தொண்டையில் தாங்கி இரத்தம் சிந்தி திமுகவை அரியணையில் அமர்த்தியவர் எம்ஜிஆர். அண்ணாவின் மறைவிற்கு பின் கருணாநிதியை முதல்வராக்கியவர்.

உதவி செய்தது எம்ஜிஆர்
கடனில் இருந்த கருணாநிதி குடும்பத்திற்கு சம்பளம் வாங்காமல் எங்கள் தங்கம் படம் நடித்து கொடுத்தவர். துரை முருகனை தன் சொந்த செலவில் எம்.ஏ.பி.எல் படிக்க வைத்து சட்டக்கல்லூரி கழக மாணவ தலைவராக்கியது. ரத்தக்கொதிப்பால் சட்டமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்த துரைமுருகனை மடியில் கிடத்தி முதலுதவி செய்து காப்பாற்றியவர் என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை மதுரை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றத்தினர் ஒட்டியுள்ளனர்.

செல்லப்பிள்ளை
முன்னதாக 1970களில் துரைமுருகன் எம்.ஜி.ஆர் மீது தனிப்பட்ட மரியாதையும், பாசத்தையும் வைத்திருந்தார். திமுக-வில் எம்.ஜி.ஆர் இருந்தவரை அவரின் செல்லப்பிள்ளையாக துரைமுருகன் வலம்வந்த காலம் இருந்தது. அதே எம்.ஜி.ஆர் திமுக-வுக்கு எதிராக தனி இயக்கம் கண்டபோது தன்பின்னால் துரைமுருகன் வந்துவிடுவார் என்று நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆனால், திமுக-வை விட்டு வெளியேற மறுத்துவிட்டார் துரைமுருகன்.

முதுகில் தட்டி கொடுத்தார்
இதைப்பற்றி துரைமுருகன் ஒருமுறை கூறும் போது "முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்தபோது தலைமை செயலகத்தில் என்னை பார்த்துவிட்டார். உடனே என்னை அவருடைய அறைக்கு அழைத்தார். நான் சென்றவுடன் இருக்கையில் அமரச்சொல்லிவிட்டு, எப்படி இருக்க? என்று கேட்டுவிட்டு, சரி, உனக்கு என்ன இலாக்கா வேண்டும். அதை மட்டும் இப்போது சொல்லிவிட்டு போ" என்றார். நான் அவரிடம், எனக்கு நீங்கள் வாழ்வழித்தவர். அந்த பற்றும் பாசமும் உங்கள் மீது இருக்கும். ஆனால், எனக்கு தலைவர் கலைஞர் மட்டும்தான்னு" சொன்னேன். "கொஞ்சம் நேரம் என்னை உற்றுபார்த்துவிட்டு, என் முதுகில் தட்டிக்கொடுத்து என்னை அனுப்பிவைத்தார்" என்று கூறியிருந்தார்.

அதிமுக கோபம்
துரைமுருகனுக்கு உயர் கல்வி பயில உதவி செய்தவர் எம்.ஜி.ஆர். அவரை துரோகி என்று துரைமுருகன் சீற்றம் காட்டியிருப்பதன் பின்னணி குறித்து ஆதரவாளரகள் போது, கட்சியை முன்னிலைப்படுத்தி கட்சிக்கு துரோகம், செய்யும் நபர்களை சுட்டிக்காட்டவே அப்படி துரைமுருகன் கூறியதாக சொல்கிறார்கள். இருப்பினும்இதை அதிமுக சாதாரணமாக விடுவதாக இல்லை. தொடர்ந்து துரைமுருகனை டார்கெட் செய்து விமர்சித்து வருகிறது.












Click it and Unblock the Notifications