200 கோடி அபேஸ்..மதுரையில் ஊழல்! மேயர் கைதாகலை.. சு.வெங்கடேசன் வாய் திறக்கலையே! டாக்டர்.சரவணன் சுளீர்
மதுரை: மதுரை மாநகராட்சியில் 200 கோடிக்கு மேல் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ள நிலையில், அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், எப்பொழுதும் தமிழ், தமிழர் பண்பாடு விளம்பரம் தேடும் எம்.பி.வெங்கடேசன், மதுரை மாநகராட்சி முறைகேடு குறித்து வாய் திறக்கவில்லை ஏன்? என அதிமுக மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர்.சரவணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழகத்தில் சென்னை கோவைக்கு அடுத்தபடியாக மதுரை மாநகராட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது. மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் சொத்து வரி கட்டிடம் உள்ளது. அதில் ஏறத்தாழ 3 லட்சத்திற்கும் மேல் வணிக கட்டிடங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அதேபோல் மதுரை மாநகராட்சியில் 13 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகளும், 74.4 கிலோமீட்டர் மாநில நெடுஞ்சாலைகளும், 1540 கிலோமீட்டர் மாநகராட்சி சாலைகளும் உள்ளது. இதில் 265 கிலோமீட்டர் சாலைகளில் பேருந்துகளும், கனரக வாகனங்களும், கார்களும், இரு சக்கர வாகனங்களும் நாள்தோறும் சென்று வருகின்றன.

மதுரை மாநகராட்சி ஊழல்
1253 கிலோமீட்டர் சாலைகள் குடியிருப்பு சாலைகளாக உள்ளது. இதில் அதிகமான சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. இவற்றை சரி செய்வதற்கு கூட நிதி ஒதுக்கப்படவில்லை. வடகிழக்கு பருவ மழை காலம் தொடங்கி விட்டதால், மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். இதில் கடந்த 2022 முதல் குடியிருப்பு கட்டிடங்களுக்கு வணிக நிறுவன கட்டிடங்களுக்கு நிர்ணயிக்கப்படும் வரியை போன்று வரி நிர்ணயம் செய்து மிகப் பெரிய ஊழல் நடைபெற்று உள்ளது...! இது குறித்து மாநகராட்சி ஆணையர் காவல் துறையிடம் புகார் கொடுத்த பின்பு தான் இந்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது..!
அதிமுக டாக்டர் சரவணன்
புதிய கட்டிடம் கட்டும் மக்களிடமும், பழைய கட்டிடங்களை பழுது பார்க்கும் பொதுமக்களிடமும், "மாநகராட்சி கவுன்சிலர் முதல் துணை மேயர் வரை" ஏரியாவை பிரித்து அவர்கள் தங்கள் வசூல் வேட்டையை நடத்துகிறார்கள்..! அதன் உச்சகட்டமாக இவர்கள் தங்கள் பகுதியில் யாராவது வீட்டின் முன் செங்கல், மண் போன்ற கட்டுமான பொருட்களை வைத்திருக்கிறார்களா? என்று சம்பளத்திற்கு ஆள் போட்டு கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். இந்த ஊழல் குற்றச்சாட்டில் இதுவரை 23 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு பலிகடா ஆக்கப்பட்டுருக்கிறார்கள், 5 மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர், மேயரை விட்டுவிட்டு அவருடைய கணவரை கைது செய்து தற்பொழுது அவர் ஜாமீனிலும் வந்துவிட்டார்.
எடப்பாடி பழனிசாமி
இதே எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மதுரை மாநகராட்சிக்கு மட்டும் ஆயிரம் கோடியில் ஸ்மார்ட் திட்ட பணிகள், 1,296 கோடியில் குடிநீர் திட்டம், ஆயிரம் கோடியில் பறக்கும் பாலம், வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் & பாலங்கள் இது போன்ற வளர்ச்சி திட்டங்களின் மூலம் 5,000 கோடி அளவில் திட்டங்களை தந்தார். ஆனால் அமைச்சர் கே.என்.நேரு 2024-ஆம் ஆண்டில் சட்டமன்றத்தில் 1500 கோடி அளவில் பாதாள சாக்கடை திட்டங்களும், குடிநீர் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டது என்று கூறினார். இதுவரை எவ்வளவு ஒதுக்கப்பட்டது என்று அவருக்கும் தெரியவில்லை மதுரை மாநகராட்சிக்கும் தெரியவில்லை.
ஊழல் குற்றச்சாட்டு
மதுரை மாநகராட்சியில் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. 2011-ஆம் ஆண்டில் மதுரை மாநகராட்சிக்கு சிறப்பு நிதியாக 250 கோடியை ஜெயலலிதா வழங்கினார். மதுரை மாநகராட்சியின் ஸ்மார்ட் திட்ட பணிகளுக்கு எடப்பாடி ஆயிரம் கோடி ரூபாய் வழங்கினார். அதேபோல மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க 1292 கோடியில் குடிநீர் திட்டத்தை வழங்கினார். 50 கோடியில் மதுரையில் நான்கு மாசு வீதிகளிலும் சாலைகள் பணி அமைக்கும் பணிகள் ஆயிரம் கோடியில் பறக்கும் பாலம், மதுரை தெப்பக்குளத்தில் நிரந்தர தண்ணீர் தேக்கம் வைகை ஆற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைகள் 300 கோடிக்கு மேல் வைகை கரைகளில் சாலை வசதி. இதுபோன்று மதுரை மாநகராட்சி மட்டும் ஏறத்தாழ 1000 கோடி அளவில் அம்மா ஆட்சியில் காலத்தில் திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. இதை எங்களால் பட்டியலிட்டு சொல்ல முடியும்.
எம்.பி. வெங்கடேசன்
ஜெயலலிதா அவர்களின், "மழைநீர் சேகரிப்பு திட்டம்" அனைத்து தரப்பு மக்களாலும் வெகுவாக பாராட்டும் வண்ணம் அமைந்தது. இங்கிலாந்து நாட்டின் பத்திரிகைகளே இந்த திட்டத்தை புகழ்ந்து பாராட்டும் வண்ணம் இத்திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டது. இவையாவும் அதிமுக ஆட்சியின் சாதனைகள் ஆகும். "எப்பொழுதும் தமிழ், தமிழர் பண்பாடு" என மக்கள் மன்றத்திலும், செய்தியாளர்களிடமும் பேசி விளம்பரம் தேடும் எம்.பி.வெங்கடேசன், "மதுரை மாநகராட்சி முறைகேடு" குறித்து வாய் திறக்கவில்லை ஏன்? -முதல்வர் கோபித்துக் கொள்வார் என்பதற்காகவா?" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications