தவெகவினர் விரும்பினால்.. கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி பேசுவார்.. ராஜேந்திர பாலாஜி சிக்னல்!
நெல்லை: தவெகவினர் விரும்பினால், கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுவார் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அதேபோல் அதிமுகவில் பிரச்சனைக்குரியவர்களை மீண்டும் மீண்டும் கட்சியில் சேர்த்து பிரச்சனை உருவாக்க எடப்பாடி பழனிசாமி விரும்ப மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்னும் 4 மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி அதிமுக தரப்பில் தவெக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக கூட சோசியல் மீடியா பிரபலங்களை வைத்து தவெக தனித்து நிற்பதால் எந்த ஆட்சி மாற்றமும் வந்துவிடாது என்று சில கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வந்தது.

ஆனாலும் தவெக தரப்பில் அதிமுக தலைமையில் கூட்டணியில் இணைய எந்த சிக்னலும் காட்டப்படவில்லை. இதனால் சட்டசபைத் தேர்தலில் 4 முனைப்போட்டியே நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவெக தலைவர் விஜய் தனது தலைமையில் கூட்டணி என்பதையே விரும்புகிறார். ஆனால் தவெக தொண்டர்களும் பாஜக அல்லாத அதிமுக உடன் கூட்டணி அமைக்கலாம் என்று விவாதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நெல்லையில் வஉ சிதம்பரனாரின் 89வது நினைவு நாளினை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து ராஜேந்திர பாலாஜி பேசுகையில், பிரதமர் மோடியை உங்களின் டாடி என்கிறீர்களே.. அவர்கள் கேட்டால் துணை முதல்வர் பதவியை கொடுப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ராஜேந்திர பாலாஜி, அதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார். அதேபோல் தவெகவினர் விரும்பினால், கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி அவர்களோடு பேசுவார். அதிமுகவில் தற்போது எந்த சலசலப்பும் இல்லை.. பளபளப்பாக இருக்கிறது. அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரிடம் பேச வேண்டும்.
ஏனென்றால் அவர்களும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தான். அதிமுகவில் பிரச்சனைக்குரியவர்களை மீண்டும் மீண்டும் கட்சியில் சேர்த்து பிரச்சனை உருவாக்க எடப்பாடி பழனிசாமி விரும்ப மாட்டார. அதிமுகவுக்கு எது தேவையோ அதனை எடப்பாடி பழனிசாமி செய்வார். அதேபோல் SIR என்பது போலி வாக்காளர்களை நீக்குவதாகும். அதனால் பீகாரில் என்ன முடிவு ஏற்பட்டதோ, அதேதான் தமிழ்நாட்டிலும் ஏற்படும் என்றார்.












Click it and Unblock the Notifications