மனங்களை வென்ற ஆயி பூரணம் அம்மாள்.. “எல்லா மாணவர்கள் சார்பாக நன்றிங்கம்மா.." நெகிழ்ந்த அன்பில் மகேஷ்!
மதுரை: அரசுப் பள்ளிக்கு தனது ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய ஆயி பூரணம் அம்மாளை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி உருக்கமாக நன்றி தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. மேலும், ஆயி பூரணம் அம்மாவை கௌரவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். கனரா வங்கியில் வேலை பார்த்த இவரது கணவர் உக்கிரபாண்டியன், 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். வாரிசு அடிப்படையில் கணவரின் வேலை ஆயி என்ற பூரணத்துக்கு கிடைத்தது. இவர் தற்போது மதுரை தல்லாகுளம் கனரா வங்கிக் கிளையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ஆயி என்ற பூரணத்தின் மகள் ஜனனி இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவர் இறக்கும் தருவாயில் தனது தாயாரிடம், தனது தாத்தா வழங்கிய நிலத்தைச் சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு தானமாக வழங்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக, தனது பெயரில் இருந்த ரூ.7 கோடி மதிப்பிலான 1.5 ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார். கடந்த 5ஆம் தேதி பள்ளியின் பெயரில் நிலத்தை பத்திரப் பதிவும் செய்து கொடுத்தார்.
அரசுப் பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய ஆயி பூரணம் அம்மாளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆயி பூரணம் அம்மாளுக்கு போனில் தொடர்புகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ், அவரது செயலை பாராட்டியதோடு, எல்லா மாணவர்கள் சார்பாகவும் நன்றிங்கம்மா" எனத் தெரிவித்தார். மேலும், இந்த மாதம் மதுரைக்கு நேரில் வந்து பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "1.5 ஏக்கர் நிலத்தை அரசுப் பள்ளிக்கு வழங்கிய "ஆயி என்ற பூரணம் அம்மாள்" அவர்களை வணங்குகிறேன்! போற்றுகிறேன்! மதுரை ஒத்தக்கடை கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள் சார்பாகவும், அப்பள்ளியில் பயிலும் வருங்கால அறிஞர்கள் சார்பாகவும் பூரணம் அம்மாள் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்து, அவரின் செல்வ மகள் மறைந்த ஜனனி அவர்களின் சேவை மனப்பான்மையைப் போற்றுகிறேன்.

"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" எனும் பாரதியின் வரிகளுக்கு ஏற்ப வாழும் பூரணம் அம்மாள் அவர்களின் தொண்டு மகத்தானது!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஜனவரி 29ஆம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பூரணம் அம்மாள் அவர்கள் கௌரவிக்கப்பட உள்ளார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications