எங்க கூட்டணிக்கே மிகப் பெரிய வெற்றி.. மிக விரைவில் வெளியாகும் அறிவிப்பு! உற்சாகமாக பேசிய அன்புமணி
மதுரை: விரைவில் எங்கள் கூட்டணியை அறிவிப்போம். பேச்சுவார்த்தையில் இருக்கிறோம். எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியடையும். இன்றைய நிலவரப்படி கூட்டணி பற்றி என்னால் பேச முடியாது. ஆனால், பெரிய கூட்டணி முடிவாகும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்," திமுக மீது மிகுந்த கோபத்தில் மக்கள் இருக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதிகளில் 13% மட்டுமே நிறைவேற்றி இருக்கிறார்கள். இதனால் அனைவரும் திமுகவுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்திருக்கிறார்கள். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்பதில் மாற்று கருத்தே இல்லை.
அதேபோல தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளாண் துறை வளர்ச்சி சொல்ல முடியாத அளவுக்கு சரிவில் உள்ளது. கடந்தாண்டு மைனஸ் 3.8 சதவீதம், இந்த ஆண்டு மைனஸ் 1.8 சதவீதம். எந்த ஆட்சியிலும் இப்படி இருந்தது இல்லை.

அன்புமணி ராமதாஸ்
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு தான். ரூ. 62,000 கோடிக்கு வட்டி கட்டுகிறார்கள். அதன் பிறகு தான் உத்தரபிரதேசம் ஆனால் தமிழ்நாட்டின் மூன்றில் ஒரு பங்குக்கும் மேல் மக்கள் உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ளனர். வீடு கட்ட கடன் வாங்கலாம்.அங்கு வாழ்வதற்கு கடன் வாங்கக் கூடாது. அதைத்தான் தமிழக அரசு செய்கிறது. பணத்தை வைத்து கொள்ளை அடிக்கிறார்கள். தமிழகத்தில் கட்டுமானமே இல்லை. மணல் கொள்ளை உட்பட அமலாக்கத் துறை பட்டியல் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு அதைப் பற்றி கவலைப்படாமல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
'காட்ஃபாதர்'
கனிம வள கொள்ளை என்று நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். இதற்கெல்லாம் 'காட்ஃபாதர்' ஒருவர் தென் மாவட்டத்தில் இருக்கிறார். பெரிய பொறுப்பில் இருக்கிறார். மேற்கு தொடர்ச்சி மலை நமக்கு ஒரு வரம். அந்த மலையை அழித்தொழித்து நாசப்படுத்த வேண்டும் என்று முடிவில் இருக்கிறார்கள். உறுதியாக சிபிஐ விசாரணை வரும் அதில் மாற்றுக் கருத்து இல்லை. சமூக நீதி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதியே இல்லை. தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 69% இட ஒதுக்கீடை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 365 சமுதாயங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். பயன்பெறாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும்.
ஸ்டாலின்
இதையெல்லாம் கணக்கெடுப்பு நடத்தினால் மட்டும்தான் தெரியும். அதைக்கூட நடத்த மாட்டேன் என்று சொல்லும் முதல்வரை பார்த்திருக்கீங்களா. அவர் தான் ஸ்டாலின். இவ்வளவு அநியாயம் நடந்து கொண்டிருக்கின்ற இந்த ஆட்சியில். தொழில் முதலீடு வந்து விட்டதாக பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். தற்போது நான் அது தொடர்பான ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறேன். 34 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கிறது, ரூ.11 லட்சத்து 32 ஆயிரம் கோடி முதல்வர் கிடைத்துள்ளது என்று பொய்யை முதல்வர் சொல்லி வந்தார்.
பெரிய கூட்டணி அறிவிப்பு
தற்போது புத்தகம் போட்டவுடன் வாயை திறக்கவில்லை. 8.8% தான் தொழில் முதலீடு வந்துள்ளது. ஒரு லட்சத்து 56 ஆயிரம் கோடிக்கு தான் ஒப்புதல் கொடுத்துள்ளார்கள். இந்த தேர்தலில் திமுக படுதோல்வி அடையும். விரைவில் எங்கள் கூட்டணியை அறிவிப்போம். பேச்சுவார்த்தையில் இருக்கிறோம். எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியடையும். இன்றைய நிலவரப்படி கூட்டணி பற்றி என்னால் பேச முடியாது. ஆனால், பெரிய கூட்டணி முடிவாகும். ஆன்மிகத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது இதுதான் நிலைபாடு. நீதிமன்ற தீர்ப்பை அரசு மதிக்க வேண்டும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லாத சூழலை உருவாக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications